வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (07/03/2018)

கடைசி தொடர்பு:12:15 (07/03/2018)

சிலைகள் காணாமல் போன விவகாரம்! - தஞ்சை பெரியகோயில் அறங்காவலரை விசாரிக்க வலியுறுத்தல்

தஞ்சைப் பெரிய கோயிலில் காணாமல் போன சிலைகள் தொடர்பாக, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தஞ்சை பெரியகோயில் சிலைகள்

தஞ்சைப் பெரியகோயிலில் வைக்கப்பட்டிருந்த மாமன்னர் ராஜராஜ சோழன், இவரது மனைவி லோகமாதேவியின் சிலைகள் காணாமல் போன விவகாரம், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல நூறு ஆண்டுகள் பழமையான, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகள் மாயமான விவகாரம், கடந்த பல ஆண்டுகளாகவே பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. இந்தச் சிலைகள், குஜராத்தில் உள்ள தனியார் அருங்காட்சியத்தில் இருப்பதாக 10 ஆண்டுகளுக்கு முன்பு தகவல் வெளியானது. அந்தச் சிலைகளை மீட்க, அப்போதைய முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் தொல்லியல் ஆய்வாளர்கள் நாகசாமி, குடவாயில் பாலசுப்ரமணியன், ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு உள்ளிட்ட குழுவினர் குஜராத் சென்று, தனியார் அருங்காட்சியகத்தில் இருந்த ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகளை ஆய்வுசெய்து உறுதிசெய்தனர். ஆனால்,  அந்தச் சிலைகள் மீட்டுக்கொண்டு வரப்படாமலேயே இருந்தன.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அளித்த புகாரின் பேரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், இதுகுறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், 62 சிலைகள் காணாமல் போனதும் தெரியவந்துள்ளது. பெரியகோயில் உள்பட தஞ்சையில் உள்ள 88 கோயில்களுக்கு பரம்பரை அறங்காவலராக உள்ள பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் இவரது குடும்பத்தினரிடம் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என தஞ்சைப் பெரியகோயில் உரிமை மீட்புக்குழுவினர் வலியுறுத்தியுள்ளார்கள். விரைவில் காவல்துறையினரிடம் மனு அளிக்கவும் முடிவுசெய்துள்ளனர்.