வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (07/03/2018)

கடைசி தொடர்பு:13:00 (07/03/2018)

தூத்துக்குடி துறைமுகக் கட்டுமான ஒப்பந்ததாரர் நிறுவனங்களில் வருமான வரி சோதனை

தூத்துக்குடி துறைமுகம் மற்றும் மாநகராட்சி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

கட்டுமான ஒப்பந்ததாரர்  நிறுவனம்- வருமான வரி சோதனை

தூத்துக்குடி டூவிபுரம் பகுதியைச் சேர்ந்தவர், ஜாம்பர்ட் மதுரம். இவர், 'இமானுவேல் & கோ' என்ற பெயரில் கட்டுமானப் பணிகளையும் அரசு ஒப்பந்தப் பணிகளையும் மேற்கொண்டுவருகிறார். அத்துடன், லாரி எடைமேடையும் நடத்திவருகிறார். காற்றால் ஏற்படும் அலைகளைக் கட்டுப்படுத்தி, சாலைகள் அமைக்க துறைமுகம் சார்பில் ரூ.13.04 கோடிக்கு இந்த இமானுவேல் & கோ நிறுவனத்துக்கு, கடந்த 2014-16-ம் ஆண்டு ஒப்பந்தம் விடப்பட்டிருந்தது. பிறகு, தூத்துக்குடி அனல்மின் நிலையத்திலிருந்து வ.உ.சிதம்பரம் துறைமுகத்துக்கு இடையே சரக்குகள் கையாளும் வகையில் ரூ.38.88 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டன. இப்பணிகள் சரிவர நடக்காத நிலையில், கூடுதல் பணியாக துறைமுகத்துக்கு வரும் கன்டெய்னர் லாரிகள் நிறுத்துவதற்கு  வசதியாக ரூ.26.31 கோடி மதிப்பீட்டிலும் இதே நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

முதல் பணியையே சரிவர முடிக்காத நிலையில், குறுகிய காலத்தில் அடுத்தடுத்து இமானுவேல் & கோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு இந்த நிறுவனத்துக்கு ஆதரவாகத் துறைமுக நிர்வாகம் சார்பில் ஒப்பந்த நிர்வாகம் வழங்கப்பட்டுள்ளதாகவும்,  இந்த ஒப்பந்தங்களில் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடந்ததாகவும் புகர்கள் கிளம்பின. இதையடுத்து முறைகேடுகள் நடந்தது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த நிறுவனம் மற்றும் துறைமுக அதிகாரிகள் சிலர் மீது மத்திய புலனாய்வுப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்து, கடந்த சில மாதமாக விசாரணையில் ஈடுபட்டுவந்தனர்.  

இதற்கிடையில், தூத்துக்குடி துறைமுகச் சாலையில், துறைமுக நிர்வாகத்தால் அமைக்கப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரியால் திறந்துவைக்கப்பட்ட சரக்கு லாரிகள் நிறுத்தும் பாதுகாப்பு முனையத்தின் கட்டுமானப் பணிகளையும் இந்த நிறுவனமே மேற்கொண்டது. இது தவிர,  மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு கட்டுமானப் பணிகளையும் இந்த நிறுவனமே மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில் இன்று,  தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள், 5 கார்களில் வந்த 15-க்கும் மேற்பட்டோர், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அருகிலும் சிப்காட் பகுதிக்கு அருகிலும் உள்ள  இம்மானுவேல் நிறுவனத்துக்குச் சொந்தமான எடை மேடை நிலையங்களில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்தச் சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க