வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (07/03/2018)

கடைசி தொடர்பு:13:32 (07/03/2018)

தூத்துக்குடி துறைமுகத்தில் மாயமான 15 டன் செம்மரக்கட்டைகள்! சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடியில் சுங்கத்துறையின் பாதுகாப்பில் சீல் வைக்கப்பட்ட கன்டெய்னரில் இருந்து 15 டன் செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்ட விவகாரத்தில்  கன்டெய்னர் டெர்மினலுக்கான அங்கீகாரத்தை சுங்கத்துறை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. 

செம்மரம்- சுங்கத்துறை

பெங்களூருவில் இருந்து மலேசியாவுக்கு தூத்துக்குடி துறைமுகம் வழியாக கடந்த 2013-ம் ஆண்டு கடத்த இருந்த  ரூ.6.71 கோடி மதிப்புள்ள சுமார் 15 டன் செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தச் செம்மரக்கட்டைகளை கன்டெய்னரில்  அடுக்கி, தூத்துக்குடி துறைமுக சாலையில் உள்ள சுங்கத்துறையின்  அங்கீகாரம் பெற்ற ஹரி அண்ட் கோ கன்டெய்னர் டெர்மினலில் சீலிடப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கபட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முடிவடைந்தது. செம்மரக்கட்டைகளை ஏலம் விடுவதற்காகக் கடந்த சில நாள்களுக்கு முன்பு வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் செம்மரக்கட்டைகள் வைக்கப்பட்டிருந்த கன்டெய்னரைத் திறக்க முயன்றனர்.

கன்டெய்னரின் சீல் உடைக்கப்பட்டு உடைந்த, பழைய சீல் ஒட்டி வைக்கப்பட்டிருந்தது. கன்டெய்னரைத் திறந்து பார்த்தபோது, செம்மரக்கட்டைகளுக்குப் பதிலாக வைக்கோல் மற்றும் மரத்தூள் ஆகியவை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக இந்த நிறுவனத்தைச் சேர்ந்த சில அதிகாரிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.  இந்த கன்டெய்னர் டெர்மினல் சுங்கத்துறையின் அங்கீகாரம் பெற்றுச் செயல்பட்டு வந்த நிலையில், கன்டெய்னரின் சீல் உடைக்கப்பட்டு செம்மரக்கட்டைகள்  கடத்திச் செல்லப்பட்டுள்ளதால் இந்த டெர்மினலின் சார்பில் மேலாளர், மாவட்ட எஸ்.பி.மகேந்திரனிடம் புகார் மனு அளித்தார். இப்புகார் டெர்மினல் பகுதி சிப்காட் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஹரி அன்ட் கோ டெர்மினலுக்கு சுங்கத்துறையால் வழங்கப்பட்டிருந்த கன்டெய்னர் டெர்மினலின்  அங்கீகாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.   

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க