வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (07/03/2018)

கடைசி தொடர்பு:14:00 (07/03/2018)

’அப்போது இயற்பியல்; இப்போது தமிழ்!’ - முற்றுப்பெறாத பேராசிரியர்களின் மோதல்

பெரியால் பல்கலைக்கழக பேராசிரியர்கள்

''சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், கடந்த வாரம் இயற்பியல் துறை பேராசிரியர்கள் குமாரதாஸ், அன்பரசனுக்கிடையே  மோதல் ஏற்பட்டு, இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைப் போல தமிழ்த் துறையிலும் இரண்டு பேராசிரியர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழல் இருந்துவருகிறது. இது, கூடிய சீக்கிரத்தில் வெடிக்கும்'' என்கிறார்கள், அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள்.

இதுபற்றி பேராசிரியர்கள் கூறும்போது, ''பெரியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில், 2004-ம் ஆண்டு பெரியசாமியும்  தமிழ்மாறனும் இணைப் பேராசிரியர்களாகச் சேர்ந்தார்கள். பிறகு, இருவரும் பதவி உயர்வுபெற்று பேராசிரியர்கள் ஆனார்கள். பெரியசாமி,  கல்லூரியில் முழு நேரப் பணிபுரிந்துகொண்டே முனைவர் பட்டம் பெற்றது தவறு. போலிச் சான்று கொடுத்து, பணிக்குச் சேர்ந்தார் எனப் பல பூதாகரமான பிரச்னைகள் வெளியே வந்தது. அதையடுத்து, அப்போதைய துணைவேந்தர் முத்துச்செழியன் அவர்மீது விசாரணை கமிஷன் அமைத்தார்.  

இந்நிலையில் பெரியசாமி, பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவிக்கு மீண்டும் புதிதாக விண்ணப்பித்து, 2013ல் நேரடி பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.  இதனால், அவருடைய பணி மூப்பு கட்டானது. இத்துறையில், தமிழ்மாறனே சீனியர்.  ஆனால், ஜூனியரான பெரியசாமி சாதி பலம், பண பலத்தின் காரணமாக தமிழ்த்துறைத் தலைவர் ஆனார். தமிழ்மாறனால் பிரச்னை வரக் கூடாது என்று அவரை  வேறு துறைகளுக்கு பொறுப்புத்துறை தலைவராக நியமித்தனர். இருந்தபோதும், தமிழ்மாறன் தன்னுடைய துறையில் தலைவர் ஆவதையே விரும்பிவருவதால், இருவருக்குள்ளும் நீறு பூத்த நெருப்பாகப் புகைந்துகொண்டே இருக்கிறது. சீக்கிரத்தில் வெடித்து வெளியே வரும்'' என்கிறார்கள்.

இதுபற்றி தமிழ்த்துறை பேராசிரியர் தமிழ்மாறனிடம் பேசியபோது, ''என்னுடைய தமிழ்த்துறையில் நான் அனுபவத்திலும், வயதிலும் சீனியராக இருப்பதால், நான் யாரிடமும் பிரச்னைக்குச் செல்லாமல், என்னுடைய பணிகளைச் செய்துவருகிறேன். பெரியார் பல்கலைக்கழகத்தில், சுழற்சி அடிப்படையில்  துறைத் தலைவர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதால்தான், இதுபோன்ற மோதல்கள் வருகிறது'' என்றார்.

தமிழ்த்துறைத் தலைவர் பெரியசாமி, ''தொடந்து பெரியார் பல்கலைக்கழகத்தின்மீது பொய்யான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில், பத்திரிகை அறம் என்பது சுத்தமாக சீர்குலைந்துவிட்டது. நான் பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தேன். பிறகு பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்து நேரடி பேராசிரியர் ஆனேன். அதன் பிறகு, பல்கலைக்கழக நிர்வாகம் எனக்கு துறைத் தலைவர் பதவி கொடுத்தது'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க