வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (07/03/2018)

கடைசி தொடர்பு:14:15 (07/03/2018)

உருவ பொம்மை எரிப்பு! ஹெச்.ராஜாவுக்கு எதிராக பொன்முடி ஆவேசம்

'தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும்' என்று கருத்து தெரிவித்த ஹெச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்து, விழுப்புரம் தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஹெச்.ராஜா - பொன்முடி

பா.ஜ.க-வின் தேசியச் செயலாளரான ஹெச்.ராஜா, “இன்று திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டிருக்கிறது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமியின் சிலை உடைக்கப்படும்’ என்று பதிவிட்டிருந்தார். ஹெச்.ராஜாவின் இந்தக் கருத்து, தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து அரசியல் கட்சியினரும் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ”ஹெச்.ராஜாவின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து, பா.ஜ.க-வின் கருத்து அல்ல” என்று தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவைர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருந்தார். சொந்தக் கட்சிக்குள்ளேயும் கடும் எதிர்ப்பு எழுந்ததால், தனது ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து சர்ச்சைக்குரிய அந்தப் பதிவை உடனே நீக்கினார் ஹெச்.ராஜா.

விழுப்புரம்

ஆனாலும், தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் உடனே ஹெச்.ராஜாவைக் கைதுசெய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது. இந்நிலையில், இன்று விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள பெரியார் சிலை முன்பு தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் கூடிய 300-க்கும் மேற்பட்ட தி.மு.க-வினர் குவிந்தனர். அப்போது, ஹெச்.ராஜாவுக்கு எதிராகக் கோஷம் எழுப்பிய அவர்கள், ஹெச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க