எதற்காக விபரீத முடிவை எடுத்தார் எஸ்ஐ., சதீஷ்குமார்?   உண்மையைச் சொல்லும் அவரது பேட்ச் நண்பர்கள் 

போலீஸ் எஸ்.ஐ. சதீஷ்குமார்

 அயனாவரம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், இன்று அதிகாலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இது, அவரது போலீஸ் நண்பர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 தஞ்சாவூர், திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த அம்பிகாவின் மகன், சதீஷ்குமார். சிறுவயது முதலே போலீஸாக வேண்டும் என்பது சதீஷ்குமாரின் ஆசை; இல்லை லட்சியம். இதனால், அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு, கடந்த 2011-ம் ஆண்டு நேரடி சப்-இன்ஸ்பெக்டராக தமிழக காவல்துறையில் நுழைந்தார். பயிற்சியிலும் சிறப்பாகச் செயல்பட்டு, பணியில் சேர்ந்தார். சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராகக் கடந்த 4.10.2014ல் பணியமர்த்தப்பட்டார். இவருக்கு, கணேஷ்குமார் என்ற அண்ணனும் செல்வகுமார் என்ற தம்பியும் உள்ளனர். இவர்கள் இருவரும் ஜவுளி வியாபாரம் செய்துவருகிறார்கள்.

 டி.பி. சத்திரம் காவலர் குடியிருப்பில் தனியாகக் குடியிருந்துவந்தார். 33 வயதாகும் சதீஷ்குமாருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. திருமணத்துக்கு பெண் பார்க்கும் படலம் நீண்ட காலமாக நடந்துவருகிறது. இந்த நிலையில்தான், இன்று அதிகாலை 1.45 மணியளவில் அயனாவரம் போலீஸ் நிலைய வாசலில் துப்பாக்கியால் சுட்டு சதீஷ்குமார் தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்குப் பல காரணங்கள் கூறப்படும் நிலையில், சதீஷ்குமாரின் தற்கொலை, அவரது நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 இதுகுறித்து சதீஷ்குமாரின் 2011-ம் ஆண்டு பேட்ச் நண்பர்கள் சிலரிடம் பேசினோம். "சதீஷ்குமார், சப் - இன்ஸ்பெக்டராகப் பணிக்குச் சேர்ந்த நாள் முதல் திறமையாக ஒவ்வொரு வழக்கையும் கையாண்டுவந்தார். கீழ்பாக்கம் காவல் மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை கடத்தப்பட்ட வழக்கு சதீஷ்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த வழக்கில் துப்பு துலக்க தூங்காமல் விசாரித்தார். அப்போது, குழந்தையைக் கடத்தியவர் வேலூர் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததும் உயரதிகாரிகளுக்கு மட்டும் தகவல் தெரிவித்துவிட்டு, தனி ஒருவராக வேலூர் சென்று குற்றவாளியைப் பிடித்துவந்தார். அதுபோல, கீழ்பாக்கம் காவல் மாவட்டத்தில் ரவுடிகளை ஒழிப்பதிலும் சிறப்பாகச் செயல்பட்டார். இதில், சில ரவுடிகள் தரப்பிலிருந்து சதீஷ்குமாருக்கு மிரட்டல்கள் வந்தன. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் துணிச்சலாகச் செயல்பட்டார்.

அயனாவரம் போலீஸ் நிலையம்

துணிச்சலுக்கு மறுபெயரான சதீஷ்குமார், எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடியவர். எந்தவித கெட்ட பழக்கங்களும் அவருக்குக் கிடையாது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று பணியாற்றிய சதீஷ்குமார், எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை. போலீஸ் உயரதிகாரிகளின் பிரஷர் என்று சொல்கின்றனர். ஆனால், சதீஷ்குமாரைப் பொறுத்தவரை, எந்த வேலை என்றாலும் விருப்பப்பட்டு செய்வார். அப்படியிருக்கும்போது, உயரதிகாரிகளின் பிரஷர், வேலைப்பளூ என்று சொல்வதில் உண்மையில்லை. ஏனெனில், கீழ்ப்பாக்கம் காவல் சரகத்தில் எந்த வழக்கு என்றாலும் போலீஸ் உயரதிகாரிகள், சதீஷ்குமாரிடம் கொடுங்கள், துரிதமாகச் செயல்பட்டு கண்டுப்பிடித்துவிடுவார் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு போலீஸ் உயரதிகாரிகள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர் உண்டு. இதனால், அவரது சாவுக்கு வேறுகாரணம் இருக்க வாய்ப்புள்ளது. சதீஷ்குமாரை இழந்தது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. தமிழக காவல்துறை, சதீஷ்குமார் என்ற சிறப்பான  அதிகாரியை இழந்துவிட்டது" என்றனர் கண்ணீருடன். 

போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். "கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் உயரதிகாரி ஒருவரின் டார்ச்சர் காரணமாகத்தான் சதீஷ்குமார் தற்கொலை செய்துகொள்ள அதிகவாய்ப்புள்ளது. ஏனெனில், அந்த அதிகாரியால் அவருக்குக் கீழ் பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கடந்த 2011-ம் ஆண்டு போலீஸ் சீருடை அணிந்தவாறு தூக்கில் தொங்கினார். அந்தச் சம்பவத்திலும் போலீஸ் உயரதிகாரியின் பெயர் அடிப்பட்டாலும் அவர், காப்பாற்றப்பட்டார். இதனால், சட்டம் ஒழுங்கு பிரிவிலிருந்து போக்குவரத்துப் பிரிவுக்கு அவர் இடம் மாற்றப்பட்டார். அடுத்து, பெண் இன்ஸ்பெக்டர் ஒருவரும் வாட்ஸ்அப்பில் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகுறித்த தகவலைப் புலம்பித்தள்ளினார். இது, போலீஸ் வட்டாரத்தில் வைரலானது.

 எஸ்.ஐ. சதீஷ்குமார்

மாதவரம் காவல் மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட அதிகாரி பணியாற்றியபோது, அவருக்குக் கீழ் வேலைபார்த்தவர்கள் புலம்பித்தள்ளியது தனிக்கதை. தற்போது, அந்த அதிகாரி கீழ்ப்பாக்கம் சரக காவல் மாவட்டத்துக்கு வந்ததும், அங்குள்ள காக்கிகள் புலம்பினர். அதுபோல, சதீஷ்குமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். வழக்கமாக, குற்ற வழக்குகளில் சிக்குபவர்கள்குறித்த விவரங்களை வெளியிட சென்னை மாநகர போலீஸ் தயங்கும் சூழ்நிலையில், சதீஷ்குமார் தற்கொலை செய்துகொண்ட சில மணித்துளிகளில் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும், அந்தச் செய்திக்குறிப்பில்,  'என்னுடைய சாவுக்கு யாரும் காரணமில்லை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது, போலீஸ் உயரதிகாரியை காப்பாற்றும் வேலையாகக் கருதப்படுகிறது. எனவே, சதீஷ்குமாரின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்'' என்றனர்.

 சதீஷ்குமாரின் அண்ணன் கணேஷ்குமாரிடம் போனில் தொடர்புகொண்டோம். ஆனால், அவரால் பேசமுடியவில்லை. அடுத்து, அவரது உறவினர்களிடம் பேசினோம். "குடும்பப் பிரச்னை எதுவும் சதீஷ்குமாருக்கு கிடையாது. இதனால், அவரது தற்கொலைக்கு உண்மையான காரணத்தை போலீஸார் கண்டறிய வேண்டும்" என்றனர். 

துப்பாக்கி கொடுத்த எஸ்ஐ-யிடம் கிடுக்கிப்பிடி 

 சதீஷ்குமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டவுடன், போலீஸ் உயரதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள், விசாரித்துக்கொண்டிருந்தபோது, அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிப் பதிவுகளையும் பார்த்தனர். அடுத்த சில நிமிடங்களில் அந்தக் காட்சிகளைக் கைப்பற்றிய உயரதிகாரி ஒருவர், அதை கையோடு எடுத்துச் சென்றுவிட்டாராம். அடுத்து, சதீஷ்குமாருக்கு துப்பாக்கி கொடுத்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி மற்றும் இரவுப் பணியிலிருந்த போலீஸாரிடம் உயரதிகாரிகள் தனித்தனியாக விசாரித்துள்ளனர். அப்போது, எந்தத் தகவலும் வெளியில் தெரிவிக்கக் கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம். மேலும், சதீஷ்குமாரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்துள்ளனர். அங்குள்ள சதீஷ்குமாரின் உறவுகளிடமும் எந்தத் தகவலும் தெரிவிக்கக் கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால், அவர்களும் எந்தத் தகவலும் சொல்ல தயக்கம் காட்டுகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!