`எங்க நடவடிக்கை வேறு மாதிரி இருக்கும்' - தாசில்தாருக்கு எதிராகக் கொந்தளிக்கும் கிராம மக்கள்

மணல் கொள்ளையர்களுக்குத்  துணைபோகும் செந்துறை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென டி.ஆர்.ஒ-விடம் கிராம மக்கள் மனு அளித்தனர். இவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் எங்களுடைய நடவடிக்கை வேறு மாதிரி இருக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

                                      கிராம மக்கள்

புகார் கொடுத்துவந்த பொதுமக்கள் தரப்பில் பேசினோம்.வெள்ளாற்றில் அதிக அளவில் மணல் கொள்ளை நடைபெறுகிறது இதனைத் தடுக்கவேண்டிய அதிகாரிகள் கோடிக்கணக்கில் கல்லா கட்டுகிறார்கள். அரியலூர்,கடலூர் மாவட்ட எல்லையான வெள்ளாற்றில் 15 கிமீ தூரத்தில் 15 அடி ஆழத்துக்கு மேல் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக அரியலூர் மாவட்டம் முள்ளுக்குறிச்சி, ஆதனக்குறிச்சி,தெத்தேரி,  புதுப்பாளையம் மற்றும் அருகிலுள்ள 20 கிராமத்தில் வசிக்கும் சிலர் ஜேசிபி இயந்திரத்தின் மூலமாக மாட்டு வண்டிகள் மற்றும் லாரிகளில் மணல் அள்ளிச்சென்று அருகிலுள்ள முந்திரித் தோப்பில் சேமித்து, அங்கிருந்து வெளிமாவட்டத்துக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் வெள்ளாற்றில் தொடர்ந்து மணல் அள்ளுவதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. வெள்ளாறு முழுவதும் சீமைக் கருவேலமரங்கள் முளைத்துக் காடாகக் காட்சியளிக்கிறது. இதைப் பார்த்த நாங்கள் அருகிலுள்ள இரண்டு சிமென்ட் ஆலைகள் உதவியுடன் ஆற்றில் மண்டியுள்ள சீமைக் கருவேல மரங்களை பொக்லைன் மூலம் அகற்றினோம்.  இந்நிலையில், மீண்டும் வெள்ளாற்றில் மணல் அள்ளப்பட்டு வருவதை அறிந்த செம்பேரி கிராம மக்கள் வெள்ளாற்றுக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, மணல் அள்ள வருபவர்களையும், அவர்கள் பயன்படுத்தப்படும் ஜேசிபி, மாட்டு வண்டிகள், லாரிகளைப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்து வருகின்றோம். ஆனால், அதிகாரிகள் அவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வெளியே விடுகிறார்கள்.

                                         கிராம மக்கள்

ஆற்றில் மணல் அள்ள வருபவர்கள் குறித்து செந்துறை  தாசில்தாரிடம் தகவல் தெரிவித்தால் அவர் உடனடியாக அந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் தெரிவித்து, மணல் அள்ள வருபவர்களை உஷார்படுத்திவருகிறார். இது குறித்து அரியலூர் மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து செந்துறை தாசில்தார்  மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த மாதம் 15-ம் தேதி வெள்ளாற்றில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட முயன்றோம். அப்போது, அங்கு வந்த காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அனைவரும் கலைந்து சென்றோம்.  ஆனால், செந்துறை வட்டாட்சியர் இது போன்ற நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். எனவே அரியலூர்  கலெக்டர்  அவர்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம். இதற்கும் இவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் எங்களுடைய நடவடிக்கை வேறு மாதிரி இருக்கும்'' என்று எச்சரித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!