வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (07/03/2018)

கடைசி தொடர்பு:15:00 (07/03/2018)

`அதே ஆயுதத்தை நாங்களும் எடுப்போம்!' - ஹெச்.ராஜாவுக்கு எதிராகத் திராவிடர் கழகத்தினர் கொந்தளிப்பு

ராஜாவுக்கு எதிராக திராவிடர் கழகத்தினர் கொந்தளிப்பு

''இன்று திரிபுராவில் லெனின் சிலை உடைத்ததைப்போல நாளை தமிழகத்தில் சாதி வெறியர்  ஈ.வே. ராமசாமி சிலை'' என்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பதிவிட்டிருந்தார். அதையடுத்து அவருக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்து வருகிறது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பிரிவு ரோட்டில் திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம், தி.மு., ம.தி.மு.க, கம்யூனிஸ்ட்டுகள் உட்பட பல கட்சியினர் சேர்ந்து ஹெச்.ராஜாவின் உருவ பொம்மையை ரோட்டி இழுத்து வந்து தீ வைத்துக் கொளுத்தினார்கள். பிறகு காவல்துறையினர் தலையிட்டு தண்ணீர் ஊற்றி அணைத்தார்கள்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சுவாமிநாதன், ''பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த ஹெச்.ராஜா பெரியார் சிலையை மட்டும் அல்ல திருவள்ளுவர் சிலையும் உடைப்பதாகப் பதிவிட்டிருக்கிறார். இவர்களுடைய நோக்கம் எப்படியாவது தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தி பல உயிர்களைக் காவு வாங்கி காவிக் கொடியைப் பறக்கவிடலாம் என்ற கற்பனை உலகத்தில் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார். இது அவருக்கு நல்லதல்ல. பெயருக்கு முன்னாள் சாதி பெயரைப் போடக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றிய பெரியாரை சாதி வெறியர் என்கிறார். எப்படியாவது பெரியாருக்கு இழிவு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சித்தபிரமை பிடித்தவன்போல பேசி வருகிறார். அன்புள்ள ராசாவே ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு நாள் நாடாளுமன்ற ஓய்வு நேரத்தின் போது நேரு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து, நாமெல்லாம் மறைந்த பிறகு, இந்த மக்கள் யாரைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள் என்று கேட்டதற்கு காந்தி, வல்லபாய்பட்டேல், திலகர் எனப் பல பெயர்களை உச்சரித்தார்கள். ஆனால், இறுதியாக நேரு சொன்னார். `தென்னிந்தியாவில் இருக்கும் ஈ.வே.ரா.வை-தான் மக்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். காரணம் அவர் சமுதாய மாற்றத்துக்காக உழைத்துக்கொண்டிருப்பவர்' என்றாராம். நீ அழிந்தாலும் உன் வாரிசுகள் அழிந்தாலும் பெரியார் என்றென்றும் வாழ்ந்துகொண்டே இருப்பவர். ஹெச்.ராஜாவால் மட்டுமல்ல எந்தக் கொம்பனாலும் பெரியார் சிலையை உடைக்கவும் முடியாது. அவரின் கொள்கையைச் சிதைக்கவும் முடியாது. இனியும் நாங்கள் பொறுக்க மாட்டோம். ராஜா என்ன ஆயுதத்தை எடுக்கிறாரோ அதே ஆயுதத்தை நாங்களும் எடுப்போம்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க