சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் திருத்தேர் பவனி விழா!

நாகை மாவட்டம், திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்று வரும் இந்திர விழாவைத் தொடர்ந்து நேற்று (6.3.18) திருத்தேர் பவனி விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

சுவேதாரண்யேசுவரர்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் நவக்கிரகங்களில் கல்விக்கு அதிபதியான புதனுக்கு உரிய ஸ்தலமாகும்.இங்கு சிவபெருமான் தனது ஐந்து முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் அகோர மூர்த்தியாகக் காட்சியளிப்பது இத்தலத்தின் கூடுதல் சிறப்பு. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திர விழா இந்த வருடமும் கடந்த பிப்ரவரி 27 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வாகக் கடந்த 4-ம் தேதி சுவேதாரண்யேஸ்வரர் - பிரம்ம வித்யாம்பாள் திருக்கல்யாண வைபவமும் 63 நாயன்மார்களின் வீதியுலா காட்சியும் நடைபெற்றன.

இந்த இந்திர விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று காலையில் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மூன்று தேர்கள் தேர் பவனிக்காக மலர் மாலைகள் மற்றும் சைவ சமய சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடிகளால் அலங்கரிக்கப்பட்டன. மூன்று தேர்களில் சுவேதாரண்யேஸ்வரர்- அம்பாள், முருகன் - வள்ளி தெய்வானை, விநாயகர் எழுந்தருளி காட்சியளித்தனர்.

சுவேதாரண்யேசுவரர் தேர்

நேற்று காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேர்கள் கோயிலைச் சுற்றி உள்ள நான்கு வீதிகளையும் வலம் வந்தன. இதில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் எனப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து வந்தனர். தேரை இழுத்து வரும்போது `சிவ சிவ’ கோஷங்களை எழுப்பியும் மங்கள இசை வாத்தியங்களை இசைத்தும் தங்களது பக்தியை வெளிப்படுத்தினர்.

காலையில் தொடங்கிய இந்தத் தேரோட்டம் திருவெண்காட்டின் அனைத்து விதிகளையும் வலம் வந்து இரவு 7 மணிக்கு மீண்டும் கோயிலுக்கு வந்தது. பிறகு, தேர்கள் அவற்றின் இடங்களில் நிலைநிறுத்தப்பட்டன. அதைக் கொண்டாடும் விதமாக வாணவேடிக்கை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. பிறகு கோயிலில் மீண்டும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்தத் தேர் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களின் பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த இந்திர விழாவின் இறுதி நிகழ்வாக இன்று கொடியிறக்கமும் 9-ம் தேதி இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!