வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (07/03/2018)

கடைசி தொடர்பு:16:59 (07/03/2018)

ஹெச்.ராஜாவுக்கு சவப்பாடை ஊர்வலம்; பா.ஜ.க கொடி எரிப்பு; புதுச்சேரியில் களேபரம்

பெரியார் பற்றிய சர்ச்சைக் கருத்தைத் தெரிவித்த ஹெச்.ராஜா உருவ பொம்மையைச் சவப்பாடையில் ஏற்றியதோடு, பா.ஜ.க கட்சிக் கொடியையும் எரித்துப் புதுச்சேரி அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதித்திருக்கின்றன.

பாஜக

பா.ஜ.க-வின் தேசியச் செயலாளரான எச்.ராஜா, “இன்று திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டிருக்கிறது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமியின் சிலை உடைக்கப்படும்’ என்று பதிவிட்டிருந்தார். அந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரியில் காமராஜர் சாலையில் உள்ள பெரியார் சிலை அருகில் ஒன்றிணைந்தனர்.

பாஜக

அப்போது ஹெச்.ராஜாவின் உருவ பொம்மையைச் சவப்பாடையில் ஏற்றிய அவர்கள், சங்கு ஊதி ஊர்வலமாக எடுத்துச் சென்று உப்பனாறு வாய்க்காலில் தூக்கி எறிந்தனர். அதேபோல் பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஹெச்ராஜாவின் உருவ பொம்மை மற்றும் பா.ஜ.க கட்சிக் கொடியை எரித்ததோடு, ஹெச்.ராஜா, பா.ஜ.க-வுக்கு எதிராகக் கண்டனக் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல ஹெச்.ராஜாவைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறைமலை அடிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஹெச்.ராஜாவை கண்டித்து புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டவர்களைப் போலீஸார்  கைது செய்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க