ஜெயலலிதா மயக்கமடைந்த `அந்த' நிமிடங்கள்..! - 40 பக்கக் கடிதத்தை மறைக்கும் மன்னார்குடி உறவுகள் 

சசிகலா

ரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார் சசிகலா. `சிறை மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் சசிகலா. அவர் மனதளவில் தளர்ந்துபோய் இருக்கிறார். குடும்ப உறவுகளின் மோதல்களும் விசாரணை ஆணையத்தின் நெருக்குதல்களும் காரணமாக அமைந்துவிட்டன' என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தில். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகிறார் முன்னாள் நீதியரசர் ஆறுமுகசாமி. இந்த விசாரணையில், போயஸ் தோட்டத்து பணியாளர் ராஜம்மாள், ஓட்டுநர் ஐயப்பன், ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் ஜெயராமன் உட்பட பலர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, விசாரணையில் ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டது. 'தனக்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர்கள் விவரம் வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தார் சசிகலா. இதற்குச் சம்மதம் தெரிவித்த ஆணையம், இதுகுறித்த தகவல்களையும் கொடுத்தது. `உங்களுடைய வாக்குமூலத்தைப் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யுங்கள்' எனக் கூறியும், ஆணையத்தில் அலைக்கழிக்கும் வேலையைத் தொடர்ந்தனர் சசிகலா வழக்கறிஞர்கள்.

இதனால் கொந்தளித்த விசாரணை ஆணையம், `ஜெயலலிதா சிகிச்சை குறித்த விவரங்களை அளிப்பதற்கு சசிகலா மறுக்கிறார். போயஸ் தோட்டத்திலிருந்து அப்போலோ வரையில் நடந்த அனைத்து விவரங்களையும் அறிந்தவர் அவர் மட்டும்தான். கடந்தாண்டு நவம்பர் 1-ம் தேதியிலிருந்து இதுவரையில் ஆணையத்தில் ஆஜராகாமல் 5 முறை வாய்தா வாங்கிவிட்டார். இப்போதும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாமல் 7 நாள்கள் அவகாசம் கேட்கிறார். இதை அனுமதிக்க முடியாது' எனக் கூறி, அவரது வேண்டுகோளைத் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து, சிறையிலேயே சசிகலாவிடம் வாக்குமூலம் வாங்குவதற்கும் தயாராகிவருகிறார் ஆறுமுகசாமி. 

தினகரன்`ஆணைய விசாரணையைப் புறக்கணிப்பது ஏன்' என்ற கேள்வியை, மன்னார்குடி குடும்ப உறவுகளிடம் முன்வைத்தோம். "விசாரணை ஆணையத்தின் நெருக்குதல்களால் மிகவும் நொந்துபோய் இருக்கிறார் சசிகலா. `ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்' என விரும்புகிறார் ஆறுமுகசாமி. அப்போலோவில் வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் அனைத்தும் ஆதாரத்துடன் சமர்பிக்கப்பட்டுவிட்டன. சசிகலா குடும்பத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட ஆரம்பித்தபோதே, 'விசாரணைக் கமிஷன் அமைப்பார்கள்' என உறுதியாக நம்பினார் சசிகலா. அதற்கேற்ப, ஆணையம் அமைக்கப்பட்டபோது, தன்னுடைய விளக்கமாக 40 பக்கத்துக்குக் கைப்பட கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், போயஸ் கார்டன் முதல் அப்போலோ வரையில் என்ன நடந்தது. மருத்துவர்கள் கூறிய காரணம் என்ன. கார்டனில் மயக்கமடைவதற்கு முன்பாக என்ன நடந்தது என்பது குறித்த அனைத்துத் தகவல்களையும் அதில் குறிப்பிட்டிருந்தார். இப்போது, 'நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்' என ஆணையம் கூறுவதால், இந்த 40 பக்கக் கடிதத்தையே, பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்வதற்கு முடிவு செய்தார் சசிகலா. ஆனால், அவருடைய வழக்கறிஞர்கள்தாம் அவரை திசைதிருப்பிவிட்டனர்" என விவரித்த குடும்ப உறவினர் ஒருவர், 

விவேக் ஜெயராமன்``இந்தக் கடிதம் வெளியாவதை சில வழக்கறிஞர்களும் குடும்ப உறவுகளும் விரும்பவில்லை. 'இந்தக் கடிதம் வெளியானால், உங்களுக்கே சிக்கலாக முடியும். இதைப் பற்றி வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம். யார் யார் என்னென்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டு, உங்களுடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்யலாம்' என உறுதியாகக் கூறிவிட்டனர். அப்போலோ மருத்துவமனை சார்பில் அனைத்து ஆதாரங்களும் சமர்பிக்கப்பட்டுவிட்ட பிறகு, சசிகலாமீது என்ன குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய முடியும். விசாரணையில் ஆஜராக முழு விருப்பத்துடன் இருக்கிறார் சசிகலா. 'சிறையில் இருந்து ஓரிரு நாள்கள் வெளியில் வருவதற்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும்' என நினைக்கிறார். அதற்குள், 'அவர் மௌன விரதம்' எனக் கூறி விவகாரத்தைத் திசை திருப்பிவிட்டனர்.

மௌன விரதமாக இருந்தாலும் உண்ணாவிரதமாக இருந்தாலும் சட்டபூர்வமாக எடுபடாது என்ற உண்மை தெரிந்தும், இவ்வாறு கூற வேண்டிய அவசியம் என்ன என்றுதான் தெரியவில்லை. தினகரனோடு மோதல் ஏற்பட்ட பிறகு, 'ஜெயா டி.வி நிர்வாகத்திலிருந்து விலகிக்கொள்கிறேன்' எனக் கூறிவிட்டு வந்தார் விவேக். 25 நாள்களாக ஜெயா டி.வி அலுவலகத்துக்கே வராமல் இருந்தார். கடந்த 19-ம் தேதி நடந்த சிறை சந்திப்புக்குப் பிறகு, மீண்டும் ஜெயா டிவி-க்கு வந்துவிட்டார். தனக்கு வேண்டிய நபரை ஜெயா டி.வி அதிகாரத்துக்குள் கொண்டு வரும் முடிவில் இருந்தார் தினகரன். அவருடைய ஆதிக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு மீண்டும் விவேக்குக்கே கூடுதல் அதிகாரம் அளித்திருக்கிறார் சசிகலா. 'தனக்கு எதிராக எந்த வாக்குமூலத்தையும் விவேக் கூறிவிடக் கூடாது' என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்" என்றார் விரிவாக. 

ஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் 9-ம் தேதி மீண்டும் ஆஜராக இருக்கிறார் விவேக் ஜெயராமன். 'சசிகலாவுக்கு எதிராக, அவரிடமிருந்து எளிதில் தகவல்களைப் பெற்றுவிடலாம்' என நம்புகின்றனர் ஆட்சியில் உள்ளவர்கள். 'சசிகலாவுக்கு எதிராக, அவ்வளவு எளிதில் அவர் வாய் திறக்க மாட்டார்' என்கின்றனர் போயஸ் கார்டன் நிர்வாகிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!