தற்கொலைக்கு முன் ஜீவிதாவின் கடைசி போன் உரையாடல்!

ஜீவிதா

ரயிலிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, இளம்பெண் ஒருவர், தன்னுடைய கணவரின் பெண் தோழியிடம் காரசாரமாக உரையாடும் ஆடியோ, போலீஸாரிடம் சிக்கியுள்ளது.  

சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவிதா. வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றினார். இவருக்கும், ஆவடியை அடுத்த சேக்காடு பகுதியைச் சேர்ந்த ரோஸ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 3-ம் தேதி, மின்சார ரயிலில் பயணித்த ஜீவிதா, கிண்டி - சைதாப்பேட்டை ரயில் நிலையத்துக்கு இடையே, ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவுசெய்து ரோஸை கைதுசெய்தனர்

இதற்கிடையில், ஜீவிதாவின் அம்மா கொடுத்த புகாரில், ரோஸுக்கும் அவருடன் பணியாற்றும் ஒரு பெண்ணுக்கும் நட்பு இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். அவரிடமிருந்து தற்கொலைக்கு முன் ஜீவிதா பேசிய போன் உரையாடலை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில், அந்தப் பெண்ணிடம் ஜீவிதா கடும் கோபத்தில் பேசுகிறார். அதற்கு, ரோஸின் பெண் தோழி மழுப்பலாகப் பதிலளிக்கிறார்.  

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "ஜீவிதாவுக்கு ரோஸின் பெண் தோழிகுறித்த விவரம் தெரிந்துள்ளது. இதனால், அவரிடம் போனில் பேசியுள்ளார். அப்போது, 'என்னுடைய கணவருடன் கடந்த சண்டே எங்கு சென்றாய்' என்று கேட்கிறார் ஜீவிதா. அதற்கு ரோஸின் பெண் தோழியால் பதிலளிக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து, 'நீங்கள் இருவரும் நண்பர்களாகப் பழகினாலும் எனக்கு அது பிடிக்கவில்லை. ஏனெனில், என் கணவர் என்னுடனும் என் குழந்தையுடனும் பேசுவதில்லை. ஆனால், நீங்கள் இரவு 11 மணிக்கு மேல் என் கணவருடன் போனில் பேசுகிறீர்கள், அவருடன் வெளியில் செல்கிறீர்கள்' என்று ஜீவிதா ஆவேசமாக கேட்க... அதற்கு, 'என் பாய் பிரண்ட்ஸ்களுடன் செல்வதைப் போலத்தான் அவருடனும் செல்கிறேன்' என்று அந்தப்பெண் பதிலளிக்கிறார். 'என்னைப்போன்ற நிலைமை உங்களுக்கு நடந்தால்' என்று சொல்வதற்குள் அந்தப்பெண், 'அப்படியெல்லாம் பேசாதீர்கள்' என்று பதிலளிக்கிறார். இவ்வாறு அவர்களின் உரையாடல் தொடர்கிறது.  அதன்பிறகுதான் ஜீவிதா தற்கொலை செய்துள்ளார். ஜீவிதா தற்கொலை சம்பவத்தில் தொடர்புள்ள அனைவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றனர். 
 
இதையடுத்து, ஜீவிதாவும் அவருடைய கணவரும் போனில் பேசுகின்றனர். குழந்தை, குடும்பம் தொடர்பாக இருவரும் உரையாடுகின்றனர். ஆனால், ஜீவிதாவுடன் ரோஸ் பேசாமல், பிறகு பேசுவதாக போனை வைத்துவிடுகிறார். இந்த உரையாடலும் போலீஸ் வசம் உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!