வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (07/03/2018)

கடைசி தொடர்பு:16:00 (07/03/2018)

'புறப்படத் தயாராகிவிட்டீர்களா...!' - ஈரோட்டுக்கு அழைக்கும் ஸ்டாலின்!

ஈரோடு மாநாடு- ஸ்டாலின்


தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், ஈரோடு மாநாடுகுறித்து தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், ''பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மண்ணில், தி.மு.க நடத்தும் மாநாட்டுகு வருக வருக என தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாம் உங்களை கரங்கூப்பி அழைக்கிறேன். தி.மு.க  சார்பில், இதற்குமுன் நடைபெற்ற மாநாடு, கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி திங்களில் திருச்சி மாநகரத்தில் நடைபெற்ற 10-வது மாநில மாநாடாகும். 

'படை பெருத்ததால் பார் சிறுத்ததோ... பார் சிறுத்ததால் படை பெருத்ததோ' என விளங்கிக்கொள்ள முடியாத வகையில், மலைக்கோட்டை மாநகரெங்கும் மனிதத் தலைகளாக, அதுவும் கழகத்தின் கரைவேட்டி கட்டி, கையில் இருவண்ணக் கொடியேந்தி, அணிதிரண்ட மனிதத் தலைகளாகக் காட்சியளித்தது இன்றும் மனதில் நிலைத்து இன்பமூட்டுகிறது. அதன்பின்,  சமீபத்தில் நடைபெற்ற மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானித்தபடி, இப்போது நாம் ஈரோட்டில் சந்திக்கவிருக்கிறோம். இது, மாநில மாநாடல்ல, மண்டல மாநாடுதான். எனினும், பொதுக்கூட்டத்தையே மாநாடு போல நடத்தும் வலிமைபடைத்த இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள், மண்டல மாநாட்டை மாநில மாநாட்டைப் போல சீரும் சிறப்போடும் நடத்திக்காட்டுவார்கள் எனும் நம்பிக்கையோடு அழைப்பு விடுக்கிறேன். மேற்கு மண்டலம் என்பது நமக்கு அன்னியமன்று. 

ஈரோடு பெரியார் நகரில் உள்ள அண்ணா திடலில், 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுப் பந்தல் அமைக்கும் பணிகள் வெகு சிறப்பாக நடைபெற்றுவருகந்து. பந்தலில் மட்டும் ஏறத்தாழ 1 லட்சம் பேர் அமர முடியும் என்ற நிலையில், கழக மாநாடுகள் என்றாலே காணும் இடமெல்லாம் கழகத் தொண்டர்களின் தலைகளே அலைகளாகப் பரவியிருக்கும் என்பதால், பந்தலைக் கடந்தும் நாலாபக்கமும் பெருங்கூட்டத்தைக் காணும் வாய்ப்பு இப்போதே கிட்டிவிட்டதைப் போல, மனக்கண் முன் விரிகிறது. மாநாட்டு நிகழ்ச்சி நிரல் இறுதிவடிவம் பெறும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கழகத்தின் கொள்கைகளை விளக்கும் வகையிலான தலைப்புகளில், முன்னணி நிர்வாகிகளும், இளம் சொற்பொழிவாளர்களும் நம் செவிகளுக்கு நல்விருந்து படைக்க இருக்கிறார்கள்.

இன்றைய சூழலில், தமிழ்நாடும் இந்தியத் திருநாடும் எதிர்கொள்ளும் சவால்களை, நெருக்கடிகளை, சோதனைகளை முறியடித்து, மக்கள் விரோத, ஜனநாயக விரோத ஆட்சிகளை அப்புறப்படுத்தி, உண்மையான மக்களாட்சி அமைவதற்கான வகையில் மாநாட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. தந்தை பெரியாரின் விரல்பிடித்து, எந்த ஈரோட்டு மண்ணில், குடியரசு பத்திரிகையின் உதவி ஆசிரியராக நம் தலைவர் கலைஞர் கொள்கை முழக்கம் செய்யும் எழுத்தாற்றலை வெளிப்படுத்தினாரோ, அந்த ஈரோட்டில் நடைபெறும் மண்டல மாநாட்டில், கொள்கைப் பட்டாளமாகக் குவிந்திடுவோம். உங்களில் ஒருவனாக, உங்கள் அன்புச் சகோதரனாக, தலைவர் கலைஞரின் பிள்ளையாகக் கேட்டுக்கொள்கிறேன். எழுச்சி முகம்காட்டி ஈரோடு நம்மை அழைக்கிறது. புறப்படத் தயாராகிவிட்டீர்களா...'' என்று அழைப்பு விடுத்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க