வெளியிடப்பட்ட நேரம்: 15:08 (07/03/2018)

கடைசி தொடர்பு:15:39 (07/03/2018)

ஜெயலலிதா மரணத்துக்கு யார் காரணம்? - பிம்பம் உடைக்குமா சசிகலா பிரமாணப் பத்திரம்? #VikatanExclusive

சசிகலா

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு தாக்கல் செய்ய உள்ள பிரமாணப் பத்திரம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பக்கூடும் என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள். 

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையம், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட நபர்களுக்குச் சம்மன் அனுப்பி, அவர்களிடம் நேரில் விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து அவரின் தோழி சசிகலாவிடம் விசாரணை நடத்துவதற்காக அவருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. சசிகலா மௌன விரதத்தில் இருந்ததால், கால அவகாசம் கோரப்பட்டது. மேலும், "பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா இருப்பதால், அவர் நேரில் ஆஜராக முடியாது" என விசாரணை ஆணையத்திடம் சசிகலா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவே ஐந்து முறை கால அவகாசம் கேட்டனர் சசிகலா தரப்பினர். இறுதியாக, "மார்ச் 6-ம் தேதியன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்" என்று நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டிருந்தார். மேலும், இதுவரை ஆறுமுகசாமியிடம் வாக்குமூலம் அளித்தவர்களின் ஆவணங்களும் அவர் தரப்பு வழக்கறிஞரிடம் ஏற்கெனவே வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று அவர் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று சசிகலா தரப்பில் மீண்டும் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் சசிகலாவின் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதற்கு மேலும் ஒருவார கால அவகாசம் வேண்டும் என்று அதில் கோரப்பட்டது. 

ஆனால் நீதிபதி, "கூடுதல் அவகாசம் இனியும் தரமுடியாது. ஏற்கெனவே நீங்கள் கேட்டபடி, கூடுதல் அவகாசம் கொடுத்தும் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யவில்லை. இனி நீங்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாவிட்டால், நாங்கள் நீதிமன்றம் சென்று விசாரிக்க வேண்டி வரும்" என்று கடுமையுடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெங்களூரு சிறையில் சசிகலாவை, அவருடைய வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் சந்தித்து வந்துள்ளார். அவரிடம் பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்யவேண்டிய விவரங்கள் குறித்தும் நீண்ட ஆலோசனையும் நடத்தியுள்ளார். சசிகலா தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டது என்றும், அதைச் சரியான முறையில் வடிவமைப்பதற்காகத்தான் காலஅவகாசம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சசிகலா தாக்கல் செய்ய உள்ள பிரமாணப் பத்திரத்தில் 2011 முதல் ஜெயலலிதாவிற்கும், அவருக்குமான நட்புறவின் அடிப்படையிலான விவரங்களை தாக்கல் செய்ய உள்ளார். குறிப்பாக போயஸ்கார்டனிலிருந்து அவர் வெளியேற்றப்பட்ட நிகழ்வு, அதன்பிறகு மீண்டும் கார்டனுக்குள் என்ட்ரி ஆனது குறித்த தகவல்களும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜெயலலிதாவிற்கும், சசிகலாவிற்கும் இணக்கமான விஷயங்களையும் அந்த மனுவில் சுட்டிக்காட்ட உள்ளார் எனத் தெரிகிறது. செப்டம்பர் 22-ம் தேதி, மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதிலிருந்து டிசம்பர் 4-ம் தேதி அன்று, அப்போலோவில் ஜெயலலிதா மரணத்திற்கு முதல்நாள் வரை நடந்த அனைத்து விவரங்களையும் அவர் தன்னுடைய பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

சசிகலா தரப்பு தாக்கல் செய்யவிருக்கும் பிரமாணப் பத்திரத்தை படித்து முடிப்பதற்கே, நீதிபதிக்கு ஒருவாரம் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பிரமாணப் பத்திரத்தின் மூலம் "ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா குடும்பமே காரணம்" என்ற பிம்பம் உடையும் என்று சசிகலா தரப்பு நினைக்கிறது. ஏற்கெனவே, டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ ஏற்படுத்திய பரபரப்பைப் போன்று, சசிகலாவின் பிரமாணப் பத்திரமும் தமிழக அரசியலில் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


டிரெண்டிங் @ விகடன்