வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (07/03/2018)

கடைசி தொடர்பு:16:45 (07/03/2018)

வதந்தியால் வன்முறை எதிரொலி! - ஃபேஸ்புக்குக்கு தடை விதிக்கவுள்ள இலங்கை

 

 இலங்கை

கண்டியில் ஆரம்பித்த மத மோதல்கள், இலங்கையின் மற்ற இடங்களுக்கும் பரவிவரும் நிலையில், 10 நாள்கள் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'மத மோதல்களைத் தூண்டிவிடுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும்விதமாக அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது' என்று அரசு செய்தித்தொடர்பாளர் அறிவித்துள்ளார். இலங்கையில், கடந்த ஓர் ஆண்டாகவே சிங்களர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல் இருந்துவருகிறது. மதமாற்றம் செய்கிறார்கள் என்றும், புத்த வரலாற்று இடங்களை இஸ்லாமியர்கள் சிதைக்கிறார்கள் என்றும் சிங்களர்கள் குற்றம்சாட்டிவந்தனர். இலங்கையில், ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு அடைக்கலம் தருவதற்கு சிங்களர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவைதான், இருதரப்பினருக்கும் இடையிலான மதமோதலுக்கு மையப்புள்ளி என்று அங்குள்ள செய்திகள் சொல்கின்றன. 

இலங்கை அரசின் செய்தித்தொடர்பாளர் தயாசிறி ஜெயசேகரா, ''சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. தீவிரமடைந்துள்ள மத மோதல்கள்குறித்து விரிவாக பேசப்பட்டது. நாட்டின் பிற பகுதிகளுக்கும் மத மோதல்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில், 10 நாள்கள் அவசர நிலை  பிரகடனம் செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.  ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக வதந்தியையும் மோதலையும் பரப்புவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த சில தினங்களாக அம்பாறை, கண்டி ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள், உயிர் சேதத்தையும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலையால், நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் உருவாகியிருக்கிறது. உயிரையும் உடமைகளையும் இழந்தவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வன்முறைச் சம்பவங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். தற்போது மோதல் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில், வரும் 24 மணி நேரத்தில் அமைதி உண்டாக்க முழு முயற்சி எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்'' என்று கூறியுள்ளார். இதனிடையே ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை இலங்கையில் தடை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடத்தி முடித்த சிங்கள அரசு,  2009-ம் ஆண்டுக்குப் பிறகு, அந்நாட்டில் அமலில் இருந்துவந்த அவசர நிலை பிரகடனத்தை வாபஸ் பெற்றது. இப்போது, 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவசர நிலையை அந்நாடு பிரகடனப்படுத்தி இருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க