பாட்டுப்பாடி துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த அய்யாக்கண்ணு!

"காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வர முடியாது, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நப்பாசையில் ஓட்டுக்காகப் பிரதமர் மோடி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறுகிறார். தமிழக எம்.பி-க்களின் போராட்டம் நியாயமானது தான். ஆனால், தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருக்க வேண்டும்" எனத் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

அய்யாக்கண்ணு

இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 1-ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஒவ்வொரு பகுதியாகச் சென்று பிரசாரம் செய்து வருகின்றனர். நேற்று நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று பிரசாரம் செய்தனர். 3 வது நாளாக இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வருகை தந்தனர். கோவில்பட்டி பஸ் நிலையத்தில் பேருந்துகளில் ஏறி பயணிகள் மற்றும்  மெயின் ரோடு பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு பாடல்களைப் பாடியபடி துண்டுப்பிரசுரங்களை வழங்கினர். மேலும், கோவில்பட்டி பகுதியில் உள்ள விவாயக் கிராமங்களுக்கும் சென்று விழிப்பு உணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

அய்யாக்கண்ணு

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, "விவசாயிகளின் உயிர் நாடி காவிரி நதி. நீதிமன்ற உத்தரவுக்குப் பின்பும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. காரணம் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வரமுடியாது. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நப்பாசையில் ஓட்டுக்காகப் பிரதமர் மோடி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறுகிறார். தமிழக எம்.பி-க்களின் போராட்டம் நியாமானதுதான். ஆனால், தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், மோடியின் வீட்டில் போய் படுத்து உறங்கி போராட்டம்  நடத்தியிருக்க வேண்டும்.

ஆந்திராவுக்கு போதிய நிதி இல்லை என்று அங்குள்ள எம்.பி-க்கள் சாட்டையைச் சுழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடுமையான போராட்டம் நடத்துபவர்களை ஏமாற்றுவதற்கு மோடி நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் மோடிமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவது மட்டுமின்றி, 356 வது பிரிவினை பயன்படுத்தி கர்நாடக அரசைக் கலைக்கச் சொல்வோம். மோடி வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம், தண்ணீர் தர மறுப்பது, விவசாய பொருள்களுக்கு உரிய விலை தராமல் இருப்பது, மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதிப்பது என்று விவசாயிகளை அழித்துவிட்டால் தமிழகத்தில் பெட்ரோலிய பொருள்கள் எடுக்கலாம் என்பது மத்திய அரசு திட்டம்.
விமான விரிவாக்கம், அரசு அலுவலகம் கட்ட வேண்டும் என்று விவசாய நிலங்களைக் கையகப்படுத்த கூடாது" எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!