வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (07/03/2018)

கடைசி தொடர்பு:17:55 (07/03/2018)

”தி.மு.க.வுக்கு வெற்றி தேடித்தந்த நான் ராசியில்லாதவனா?” - பொதுக்குழுவில் வைகோ

வைகோ

"ம.தி.மு.க-வுக்காக உழைக்காதவர்கள்தான், தி.மு.க-வுடனான கூட்டணி குறித்து விமர்சனம் செய்து வருகிறார்கள்" என ஈரோட்டில் நடைபெற்ற ம.தி.மு.க பொதுக்குழுவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, கட்சி நிர்வாகிகளை விளாசித் தள்ளினார்.

 

ம.தி.மு.க-வின் 26-வது பொதுக்குழு நேற்று (மார்ச் 6) ஈரோட்டில் நடைபெற்றது. அதற்கு முதல்நாள் மாலையில் ஈரோட்டில் நடைபெற்ற உயர் நிலைக்குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தி.மு.க-வுடனான கூட்டணி குறித்து வைகோ தெரிவித்த முடிவுக்கு நிர்வாகிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அந்தக் கூட்டத்தில் பேசிய பலரும் தி.மு.க-வுடனான கூட்டணியை விரும்பவில்லை என்று தெரிவித்ததுடன், வைகோவிடம் கடுமையான வாதங்களை முன்வைத்திருக்கின்றனர். இதில் டென்ஷனான வைகோ, "நான் எடுக்கும் எந்தவொரு முடிவும் என்னுடைய சுய நோக்கத்திற்காக அல்ல; இப்போது வேறுவழியில்லை. கூட்டணியை விரும்பாதவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை" என்றார்.

 

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய வைகோ, தி.மு.கவுடனான கூட்டணி குறித்து வெளிப்படையாகச் சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். வைகோ பேசுகையில், “கூட்டணி முடிவானதைப் பற்றி நிர்வாகிகள் பலர் எளிதாக விமர்சனம் செய்கிறீர்கள். திராவிட இயக்கத்தினை அழிக்க சதி நடந்து வருகிறது. இந்தச் சமயத்தை விட்டுட்டா திராவிட இயக்கமே அழிஞ்சு போயிடும். திராவிட இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, என்னுடைய சுயமரியாதையை இழந்து தி.மு.க-வுடன் கூட்டணி வைத்திருக்கிறேன். அதனால, நீங்க யாரும் எதுவும் பேசாதீங்க.

 

வைகோ

தி.மு.க-வுடன் கூட்டணி வேணாம்னு சொல்றீங்க, ம.தி.மு.க-வில என்ன வாக்குவங்கி வச்சிருக்கீங்க?...நீங்க ஓட்டுபோட்டு நான் சி.எம். ஆகிடுவேனா? முதலமைச்சராவதற்கு ஸ்டாலினுக்கு எல்லா தகுதியும் உள்ளது. எனக்கு எதிராக 1500 கோடி ரூபாய் வாங்கியதாக ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. கொலைப்பழி சுமந்ததைவிட ரூ. 1,500 கோடி குற்றச்சாட்டு, என் இதயத்தை சுக்குநூறாக உடைத்தது மிகுந்த மனவலியைக் கொடுத்தது. பல வலிகளைக் கடந்து நான் இப்போது நிற்கிறேன். அப்படியிருக்கையில், தலைமை எடுத்த முடிவை நீங்க விமர்சனம் பண்றீங்க? 

 

தேர்தல் என்றால் கண்டிப்பாகப் பணம் செலவு செய்தாக வேண்டும். நம்மால தொகுதிக்கு 10 லட்சம் ரூபாய்கூட செலவழிக்க முடியலை. ஆனா, தி.மு.க, அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை ஒரு தொகுதிக்கு 10 கோடி ரூபாய்வரை செலவு செய்றாங்க. 2006 சட்டசபைத் தேர்தலின்போது, செலவு செய்றதுக்குக் கொடுத்த பணத்தை சில மாவட்ட நிர்வாகிகள் செலவு பண்ணாம 15 லட்சம் ரூபாய்வரை  பாக்கெட்டுல போட்டுக்கிட்டாங்க. அவங்க யார், யாருன்னு எனக்குத் தெரியும். மனசைத் தொட்டுச் சொல்லுங்க... கட்சிக்காக நீங்க அப்படி என்ன பாடுபட்டீங்கன்னு... நமக்கு உள்ள வாக்குவங்கியைக் கொண்டு, தனியா தேர்தல்ல நின்னா நாம தோற்பது உறுதி. எனவே, விவேகமும், ராஜதந்திரமும் சேர்ந்தால்தான் நாம் ஜெயிக்க முடியும்” எனக் கட்சி நிர்வாகிகளைக் கடுமையாக விளாசித் தள்ளினார். 

வைகோ

தொடர்ந்து பேசியவர், “வைகோவுக்கு ராசியில்லை. அவரைக் கட்சியில சேத்துக்காதீங்கன்னு தி.மு.க-வுல உள்ள ரெண்டுபேர் சொல்லியிருக்காங்க. 1977-ல் திருச்சிக்குத் தெற்கே தி.மு.க-வுக்கு 40 சீட்களை நான்தான் ஜெயிக்க வச்சேன். அதுபோன்று மீண்டும் ஜெயிக்க வைப்பேன். எனக்கா ராசியில்லை. ஒருசிலர் காரணமில்லாமல் நம்மைப் பகைக்கிறார்கள். என்னை வெறுக்கிறார்கள். வைகோ எப்பவுமே சீரியஸாகவே இருக்காருன்னு சொல்றாங்க. அது என்னோட குறை இல்லை. அது அடிப்படையிலே வந்தது. அதுக்காகவே இப்பல்லாம் எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன். அதனால தி.மு.க-காரங்க மேடையில சேர் கொடுக்கலை; பேர் போடலைன்னு சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படாதீங்க. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போங்க. ஏன்னா.. தி.மு.க-வை விமர்சித்து, நாமும் கொஞ்சமாகவா திட்டியிருக்கோம். முரசொலி பவள விழா நடந்த அன்னைக்கே இரண்டு பேர் எந்திரிச்சி சத்தம் போடுவாங்கன்னு பார்த்தேன். ஆனா, என் பேச்சை ரசிச்சுக் கைதட்டிக்கிட்டு இல்ல இருந்தாங்க. பெரும்பாலும் நம்ம மேல மரியாதையாகத்தான் இருக்காங்க. இதெல்லாம் கொஞ்ச நாள்ல சரியாகிடும்” என்று கூறி முடித்தார்.

 
 


டிரெண்டிங் @ விகடன்