வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (07/03/2018)

கடைசி தொடர்பு:17:45 (07/03/2018)

143 வருடம் பழைய சைக்கிள்... 3,999 கி.மீ தூரம் விழிப்பு உணர்வு பயணம்! ஆச்சர்யப்படுத்தும் கடற்படை அதிகாரி

தூய்மை இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் கடற்படை அதிகாரி ஒருவர் தனது பழைமையான சைக்கிளில் 3,999 கி.மீ தூரம் பயணித்தார். காஷ்மீரில் தொடங்கிய அவரது பயணம் கன்னியாகுமரியில் நிறைவடைகிறது. 

கடற்படை அதிகாரி

இந்தியக் கடற்படையில் அதிகாரியாகப் பணியாற்றி வருபவர், ஸ்ரீனிவாச ஆச்சார்யலு. ஆந்திராவைச் சேர்ந்த இவர், சென்னையில் உள்ள கடற்படை அலுவலகத்தில் தொலைத்தொடர்பு பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். 53 வயது நிரம்பிய இவர், இதற்கு முன்பு பலமுறை சைக்கிள் பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஸ்ரீனிவாச ஆச்சார்யலுவிடம் அவரது தாத்தா பயன்படுத்திய பழைமையான சைக்கிள் உள்ளது. 143 வருடம் பழைமையான அந்த சைக்கிளைப் பயன்படுத்தியே அவர் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். 

கடந்த 1987-ம் வருடம் முதல் பல்வேறு கோரிக்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இதுவரை 12 முறை, பழைமையான அந்த சைக்கிளில் 10,688 கி.மீ தூரத்தைக் கடந்துள்ளார். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து கடந்த பிப்ரவரி 3-ம் தேதி தூய்மையான இந்தியா திட்டம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் பயணத்தைத் தொடங்கினார். ஹிமாச்சலப் பிரதேஷ், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆந்திரா உள்ளிட்ட 10 மாநிலங்களின் வழியாகப் பயணித்த அவர், ராவி, சட்லஜ், யமுனா, நர்மதா, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி உள்ளிட்ட 15 நதிகளைக் கடந்து பயணம் மேற்கொண்ட அவர் 6-ம் தேதி இரவு நெல்லை வந்தார். 

நெல்லையில் உள்ள கடற்படை அலுவலத்தில் தங்கிய ஸ்ரீனிவாச ஆச்சார்யலு, இன்று (மார்ச் 7-ம் தேதி) குமரிக்குப் புறப்பட்டுச் சென்றார். அப்போது பேசிய அவர், ‘மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஸ்வச் பாரத் என்னும் தூய்மை இந்தியா திட்டத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தில் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளேன். நான் செல்லும் வழிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் தூய்மை இந்தியா திட்டம் குறித்து எடுத்துக் கூறினேன்’ என்றார். இன்று மாலை கன்னியாகுமரியில் நடக்கும் நிகழ்ச்சியில் கடற்படை அதிகாரிகள் முன்னிலையில் அவர் தனது பயணத்தை நிறைவு செய்கிறார். அவருக்கு அதிகாரிகள் நினைவுப் பரிசு வழங்கி பாராட்ட உள்ளனர்.