வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (07/03/2018)

கடைசி தொடர்பு:18:00 (07/03/2018)

நீதிமன்றத்தை அவமதித்த ரஜினி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார்!

அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து, மக்கள் மன்றம் மூலம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளைத் தொடங்கியுள்ள ரஜினியின் மீது, நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாகக் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

ரஜினி

கடந்த 5-ம் தேதி அன்று சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை ரஜினி திறந்துவைத்தார். இந்த விழாவில், அவரின் ரசிகர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 

சிலை திறக்கும் விழாவின் விளம்பரத்திற்காக, திருவேற்காடு முதல் பி.ஹெச்.ரோடு, கோயம்பேடு வரையில் உள்ள சாலைகளில் இரண்டு புறமும், சாலையே தெரியாத அளவிற்கு டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டன. இதனால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என வேப்பேரி காவல் ஆணையரிடம், திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த தமிழ்வேந்தன் புகார் அளித்துள்ளார். 

மேலும், சென்னை உயர் நீதி மன்றம் டிஜிட்டல் பேனர்களுக்குத் தடை விதித்திருந்த நிலையில், அந்தத் தடையையும் மீறி, சிலை திறப்பு விழாவிற்காக, தனது ஆதரவு ஆட்களைத் திரட்டி பேனர்கள் வைத்துள்ளார் என அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.