வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (07/03/2018)

கடைசி தொடர்பு:18:30 (07/03/2018)

ஹெச்.ராஜாமீது நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு..!

பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று பதிவிட்ட ஹெச்.ராஜாமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, நேற்று திரிபுராவில் லெனின் சிலையை அகற்றப்பட்டதுபோல, தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்.ராஜாவுக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்துவருகின்றனர். தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தநிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த காசி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், 'தமிழகத்தில் நிலவும் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் ஹெச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவு இரு தரப்பினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அவர் மீது, 153, 153 A, 504 ஆகிய பிரிவுகளினகீழ் வழக்குபபதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பாக ஹெச்.ராஜா, நீதிமன்றத்துக்கு நேரில் வந்து விளக்கமளிக்க உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது, அந்த வழக்கு மார்ச் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.