வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (07/03/2018)

கடைசி தொடர்பு:18:45 (07/03/2018)

`ஹெச்.ராஜா கூறும் விளக்கம் ஏற்புடையதல்ல!’ - சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

ஈ.வெ.ரா குறித்து தனது கருத்தை முகநூல் பக்கத்தில் பதிவிட்டு, கடும் சர்ச்சையில் சிக்கியுள்ள ஹெச்.ராஜாவின், பதிவு குறித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

பொன்.ராதாகிருஷ்ணன்

நேற்று (6.3.2018), `திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது, நாளைத் தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை' எனத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இந்தக் கருத்துக்குத் தமிழக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாநில அரசியல் தலைவர்கள் தொடங்கி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள் வரை, இந்தக் கருத்துக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். 

திரிபுராவில் லெனின் சிலை உடைப்பு, தமிழகத்தில் பெரியார் சிலை உடைப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் நிகழும் அசம்பாவிதங்கள் குறித்து, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசித்து, தனது அதிருப்தியினை வெளிப்படுத்தினார். 

தனது பதிவு குறித்து விளக்கம் அளித்த ஹெச்.ராஜா, தனக்கே தெரியாமல் அட்மின் இந்தக் காரியத்தை செய்துவிட்டார். அதனால், முகநூல் அட்மினை நீக்கிவிட்டேன் என்றார். இவர் கூறிய விளக்க உரை முற்றிலுமாக ஏற்புடையதாக இல்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.