ஹெச்.ராஜாவை கைது செய்யக்கோரி பா.ஜ.க அலுவலகம் முன் கொந்தளித்த தி.வி.கழகத்தினர்

திராவிட விடுதலை கழகத்தினர்

ஹெச்.ராஜாவை கைது செய்யக்கோரி மதுரையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகைவிட முயன்ற திராவிடர் விடுதலைக் கழகத்தினரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தன்னுடைய முகநூல் பக்கத்தில், 'திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை' எனப் பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்பினார். இந்தப்பதிவு தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தொடர்ந்து அவரது பதிவு நீக்கப்பட்டது. நேற்றிரவு வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையைப் பா.ஜ.க நிர்வாகிகள் உடைத்தனர். இதையடுத்து அந்தப் பகுதியே பரபரப்பானது. பெரியார் ஆதரவாளர்களும் திரண்டனர். பா.ஜ.க நிர்வாகி முத்துராமன் என்பவரை போலீஸார் கைதுசெய்தனர்.

இந்நிலையில் ’ஹெச்.ராஜா வன்முறையைத் தூண்டும்விதமாகப் பேசியுள்ளார். அவரைக் கைது செய்ய வேண்டும்’ என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதனிடையே, இந்தப் பதிவை நான் முகநூலில் பதியவில்லை என ஹெச்.ராஜா மறுத்துள்ளார். மேலும், அது தொடர்பாக வருத்தமும் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விஷயம் பூதாகரமாக வெடித்ததால் உள்துறை அமைச்சகம் முக்கிய தலைவர்களோடு ஆலோசனை நடத்தி தலைவர்களின் சிலையை உடைப்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக் கோரியும் வன்முறையில் ஈடுபவர்கள்மீது சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை மேலமடை பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர்,பெரியார் சிலையை உடைக்க வேண்டும் எனக் கூறிய ஹெச்.ராஜாவை கைது செய்யககோரி  போராட்டத்தில்  ஈடுபட்டனர், திடீரென அப்பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட்டு தாக்க முற்பட்டனர். அவர்களைப் போலீஸார் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!