வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (07/03/2018)

கடைசி தொடர்பு:20:56 (07/03/2018)

`போலீஸ் வேலையைவிட பெட்டிக்கடையே மேல்' - கலங்கவைக்கும் காவலர்

சென்னையில் பணியாற்றும் காவலர் ஒருவர், விடுமுறை அளிக்கப்படாததால் பணியிலிருந்து விலகுகிறேன் என்று வேதனையுடன் பேசும் வீடியோ ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாகிவருகிறது. 

காவல்துறையில் பணியாற்றுபவர்கள் பணிச்சுமையின் காரணமாகத் தொடர்ச்சியாகத் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துவருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்னர், சென்னை மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதா சமாதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப் படையைச் சேர்ந்த அருண்ராஜ் என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டநிலையில் இருந்தார். மருத்துவமனைக்குச் கொண்டு செல்லும் முன் அவர் உயிரிழந்தார்.

பணிச்சுமையின் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்தநிலையில், இன்று அதிகாலையில், அயனாவரம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த இருசம்பவங்களும் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில், பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் பணியாற்றிய காவலர் பாரதி ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் பாரதி, 'என்னுடைய மகனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. அதற்காக, ஊருக்குச் செல்வதற்கு ஆய்வாளரிடம் ஒரு வாரம் விடுமுறை கேட்டேன். அவர், விடுமுறை அளிக்கவில்லை.

விடுமுறை தொடர்பாக உதவி கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளரிடம் கேட்டேன். அவர்களும் விடுமுறை அளிக்கவில்லை. அதனால், என் வேலையை விடுகிறேன். நான் பெட்டிக்கடை வைத்து பிழைத்துக்கொள்வேன்' என்று தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது ஃபேஸ்புக்கில் வைரலாகிவருகிறது.