வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (07/03/2018)

கடைசி தொடர்பு:19:40 (07/03/2018)

படகு, வலைகளுடன் அரசு அலுவலகத்தை முற்றுகையிட்ட நாட்டுப்படகு மீனவர்கள்!

சிறுதொழில் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களைப் பாதிக்கும் வகையில் மீன்பிடிக்கும் வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்ற வலியுறுத்தி மீனவர்கள் படகு மற்றும் வலைகளுடன் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் முற்றுகை போராட்டம்
 

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்துக்கு உட்பட்ட மேல முந்தல், கீழ முந்தல் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பாரம்பர்ய முறையில் நாட்டுப் படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சிறு வகையிலான மீன்பிடித் தொழிலை நம்பி 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.  இந்நிலையில் தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் துணையுடன் இரட்டை இன்ஜின் பொறுத்திய நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பாரம்பர்ய முறையில் மீன்பிடிப்பில் ஈடுபடும் உள்ளூர் மீனவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் இன்ஜின் பொருத்திய நாட்டுப்படகைக் கொண்டு மீன்பிடிப்பதுடன், உள்ளூர் மீனவர்களின் வலைகளைச் சேதப்படுத்தும் சம்பவங்களையும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றனர். இதனால் இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையே மோதல் எழும் சூழல் உருவாகியுள்ளது.
இதைத் தடுக்கக் கோரியும் பாரம்பர்ய முறையில் மீன்பிடித்து வரும் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வலியுறுத்தியும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துள்ள இன்ஜின் பொறுத்திய நாட்டுப்படகு மீனவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மேல முந்தல் மற்றும் கீழ முந்தல் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் படகுகள் மற்றும் வலைகளை ஒப்படைக்கும் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்ட மீன்வளததுறை இணை அலுவலகம் முன்பு தங்களது படகு மற்றும் மீன்பிடி வலைகளுடன் திரண்ட அவர்கள் தங்கள் கோரிக்கைகள்மீது உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.