`திமிரை அடக்கியே தீருவோம்' - ஹெச்.ராஜா உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆவேசம்

திருச்சியில் பிரதமர் மோடி, ஹெச்.ராஜா உருவப் படத்தை எதிர்த்து, ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பல்வேறு கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதால் திருச்சியில் பரபரப்பு.

ஹெச்.ராஜா உருவப்படம் எரிப்பு

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தனது முகநூல் பதிவில், 'இன்று திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டிருக்கிறது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை உடைக்கப்படும்' எனப் பதிவிட்டிருந்தார். ஹெச்.ராஜாவின் இந்தக் கருத்துக்கு, கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்துக்கு ஹெச்.ராஜா மன்னிப்புக் கோரியுள்ளார். அதேவேளையில் தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு நேற்று நள்ளிரவு முதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

ஹெச்.ராஜாவின் இந்தக் கருத்துக்கு தமிழகம் முழுக்க எதிர்ப்புகள் வலுத்து வருகின்ற. இந்நிலையில் திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம், திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் பாடகர் கோவன், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ஜீவா ஆகியோர் திருச்சி சாலை ரோடு ஜெயந்தி பேருந்து நிலையம் அருகே உள்ள ஆர்.எஸ்.எஸ் தென் மண்டல அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்ததோடு, ஹெச்.ராஜாவுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர். யாரும் எதிர்பார்க்காத வண்ணம், பிரதமர் மோடி, ஹெச்.ராஜா ஆகியோர் உருவப்படத்தை எரித்தனர். அடுத்து அங்கிருந்து ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்துக்கு பூட்டுப் போட முயன்றபோது, அங்கு திரண்ட போலீஸார் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்தனர்.

முன்னதாக பத்திரிகையாளர்களிடம் பேசிய பாடகர் கோவன், “திரிபுரா மாநிலத் தேர்தலில் பி.ஜே.பி வெற்றி பெற்றதும் அந்த மாநிலத்தின் அடையாளங்களை அழிப்பது என்பது பாசிசம். அதுமட்டுமல்லாமல் லெனின் சிலையை அகற்றியதைப்போல விரைவில் பெரியாரின் சிலைகளை அகற்றுவோம் எனக் கூறுவது எவ்வளவு திமிரான பேச்சு. அந்தத் திமிரை அடக்கியே தீருவோம். சமூக நீதிக்காகப் பெரியார் போராடியதைப்போல, லெனின், மாவோ போன்றவர்கள் பொது உடமைச் சித்தாந்தங்களை முழங்கினார்கள். அவர்கள் எங்கே பிறந்திருந்தால் என்ன, அவர்களின் சிலையை அகற்றுவோம் என்பது அநாகரிகமானது. அதனால்தான். அப்படிப்பட்ட காரியத்தில் ஈடுபடும் பி.ஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களில் பூட்டுப் போட முயன்றோம். தொடர்ந்து இதுபோன்று செயல்பட்டால் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்” என்றார்.

ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை முற்றுகையிடமுயன்றதாலும் பிரதமர் மோடி உருவப்படம் எரிக்கப்பட்டதாலும் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!