வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (07/03/2018)

கடைசி தொடர்பு:21:40 (07/03/2018)

சுப.உதயகுமாரனிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் நடந்தது என்ன?

அணு உலை எதிர்ப்பாளரான சுப.உதயகுமாரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணையின்போது வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை தொடர்பாக பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளனர். 

உதயகுமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு உலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அணு உலைக்கு எதிராக மக்கள் இயக்கம் சார்பாக இரு வருடங்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக சுப.உதயகுமாரன் செயல்பட்டார். அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற உதயகுமாரன் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் மீது காவல்துறையினர் நூற்றுக்கும் அதிகமான வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். 

இந்த நிலையில், குமரி மாவட்டத்தில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைய இருப்பதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அந்தப் போராட்டங்களிலும் சுப.உதயகுமாரன் பங்கேற்றுப் போராடி வருகிறார். அதனால் அவருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அமலாக்கத்துறை சார்பாக சம்மன் அனுப்பப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை குறித்த விசாரணைக்கு வருமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. அதனை ஏற்று மார்ச் 6-ம் தேதி சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. 

இது குறித்து சுப.உதயகுமாரனிடம் கேட்டதற்கு, ‘’எனக்கு சம்மன் கிடைத்ததும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் எனது வங்கிக் கணக்கு, ஆடிட் ஸ்டேட்மென்ட் உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆஜரானேன். என்னிடம் சில கேள்விகளைக் கொடுத்து எழுத்துப் பூர்வமாக பதில் எழுதுமாறு கேட்டுக்கொண்டார்கள். அதன் பின்னர், என்னிடம் விசாரணை நடந்தது. அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் அளித்தேன். 

என்னிடம் ஒரு அதிகாரி, ’நீங்கள் ஏன் எப்போதும் அரசுக்கு எதிரான போராட்டங்களை மட்டுமே முன்னெடுக்கிறீர்கள்?’ என்று கேட்டார். நான் அவரிடம், அரசுக்கு எதிராக மட்டும் அல்லாமல் மக்கள் நலனுக்கு எதிரான தனியார் நிறுவங்களுக்கு எதிராகவும் போராடி வந்துள்ளேன். குறிப்பாக, ஸ்டெரிலைட் நிறுவனம், டி.சி.டபிள்யூ., வைகுண்டராஜனின் தாது மணல் ஆலைகள் உள்ளிட்டவைக்கு   எதிராவும் கூட போராடி இருக்கிறேன் என்பதை எடுத்துச் சொன்னேன். 

இந்த விசாரணையின் பின்னணியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் இருக்கிறார். குமரியில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைப்பதற்கு வலுக்கும் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் அவர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி எனக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமலாக்கத் துறையினரை ஏவிவிட்டுள்ளார். என்னிடம் தவறு இல்லாததால் நான் எந்த விசாரணைக்கும் பயப்படவில்லை’’ என்றார்.