18 ஆண்டுகளாகச் செயல்பட்ட தாய் தமிழ்ப் பள்ளி மூடப்பட்டது! கண்ணீர்விட்ட மாணவிகள் | With tears gone Mother Tamil school.

வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (07/03/2018)

கடைசி தொடர்பு:06:18 (08/03/2018)

18 ஆண்டுகளாகச் செயல்பட்ட தாய் தமிழ்ப் பள்ளி மூடப்பட்டது! கண்ணீர்விட்ட மாணவிகள்

மாணவிகள்

தமிழகத்தில் அதுவும் ஒரு கல்வித் துறை அமைச்சரின் சொந்த கிராமத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவரால் தனியார் பள்ளிக்கு நிகராக இலவசமாகவும், சிறப்பாக நடத்தி வந்த தாய் தமிழ்ப் பள்ளி அரசியல்வாதிகளின் இடையூறாலும் உயர் நீதிமன்ற உத்தரவாலும் இன்றோடு விடைபெறுகிறது. இதையடுத்து அப்பள்ளியில் படித்த குழந்தைகளும், அவர்களின் பெற்றோர்களும் கண்ணீர் மல்க விடைகொடுத்தார்கள்.

இதுபற்றி அப்பள்ளியின் உரிமையாளர் குமணன், ''இந்தத் தாய் தமிழ்ப் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாகக் கடந்த 18 ஆண்டுகளாக தனியார் பள்ளிகளைவிட மேண்மையாக மாவட்டம், மற்றும் மாநில அளவில் சிறந்த பள்ளியாக நடத்தி வந்தோம். இப்பள்ளி கல்வித் துறை அமைச்சரின் சொந்த கிராமத்தில் இருப்பதால் தொடர்ந்து இப்பள்ளியை நடத்த ஆணைவிட அமைச்சருக்கு வாய்ப்பும், சூழலும் இருந்தும் மூட வேண்டும் என்பதிலேயே அக்கறை காட்டினார். எங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் இடையூறு செய்தார்கள். மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வந்தார். அதையடுத்து இப்பள்ளியில் படிக்கும் பெற்றோர்களும், பள்ளி நிர்வாகமும் உயர் நீதிமன்ற உதவியை நாடியது. இந்த வழக்கை நீதிபதி மகாதேவன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பள்ளியை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து பள்ளி இன்றோடு மூடப்படுகிறது. இந்தப் பள்ளி மூடப்படும் செய்தி கேட்டு இப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றிய நந்தினியின் தந்தை இன்று மரணமடைந்துவிட்டார். இது தமிழுக்கும், தமிழருக்கும் கிடைத்த அவமானமாகவே கருதுகிறேன்'' என்றார்.

இதுபற்றி கல்வித்துறை அமைச்சரின் உதவியாளர் முருகன், ''இப்பள்ளியில் மூடப்படும் சூழல் வந்தபோது நாங்கள் இப்பள்ளியை அரசு எடுத்து நடத்த உத்தரவிட்டோம். இவர்களுக்கு நிர்வாகம் கை மாற்றுவது நினைத்துக் கவலைப்பட்டார்கள். இப்பள்ளியை மூட வேண்டும் என்பதல் சிறிதும் அமைச்சருக்குச் சம்பந்தம் இல்லை'' என்றார்.