வெளியிடப்பட்ட நேரம்: 08:28 (08/03/2018)

கடைசி தொடர்பு:08:28 (08/03/2018)

இலங்கையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்..! கலவரத்தின் ஆரம்பப்புள்ளி எது?!

அமுக்கு அமுக்கு

இன்னும் சற்றே அதிகம் அமுக்கு

அழுத்தம் அதிகரிக்கும்

வெடிப்பு நிகழும்

சுடு சுடு

நூறு பேர் விழட்டும்

துப்பாக்கியைச் சுழற்றிச் சுடு

ஆயிரக்கணக்கில் அவர்கள் விழட்டும்

பிறகுதான்

லட்சம் லட்சமாய் அணிகள் திரளும்

துப்பாக்கிகள் நொறுங்கிச் சிதறும்

மயிலாசனத்தில் அரசியல் அநாதையை

நீ அறியாயா

நீங்கள் குருடர்

பிறவிக் குருடர்

வரலாறு உமக்குத் தெரிவதேயில்லை

- எம். ஏ.நுகுமான்

இலங்கை

1980-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் `புதுசு' இதழில் வெளிவந்த இந்தக் கவிதை, இன்றைய நாளில் மீண்டும் எரியும் இலங்கை தேசத்தைக் காண்கையில் நினைவுக்கு வருகிறது. இப்போது இலங்கையில் இஸ்லாமியர்கள் வாழும் பல ஊர்கள், சிங்கள பெளத்த இனவெறிக் காடையர்களால் எரிக்கப்பட்டுள்ளன. பதற்றம் இன்னமும் தணியவில்லை; வன்மமும் இன்னமும் அடங்கவில்லை. முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி வன்முறையை ஏவிவிட இனவாதக் குழுக்கள் முனைகின்றன. நாடு முழுவதும் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியிருக்கிறார் அதிபர் மைத்திரிபால.

இப்போது நடைபெறும் கலவரங்களுக்கு ஆரம்பப்புள்ளி விசித்திரமானது. முஸ்லிம் உணவுக் கடை ஒன்றில், சாப்பாட்டில் கருத்தடை மருந்தைக் கலந்து தமிழ், சிங்கள மக்களுக்கு விற்றதாகவும் இதன் நோக்கம் தமிழ், சிங்கள மக்களின் இனவிருத்தியைத் தடுப்பது என்றும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரப்பப்பட்டது.  ஆக, இந்தக் குற்றச்சாட்டில் சிங்கள இனவாதம் தமிழர்களையும் முஸ்லிம்களுக்கு எதிராகக் கூட்டுச் சேர்த்தது. குறித்த கடையின் ஊழியரை அச்சுறுத்தி எடுக்கப்பட்ட வீடியோவில் `சாப்பாட்டில் மருந்து கலந்துள்ளதா?' எனக் கேட்கப்பட, அவர் `ஆம்' என ஒப்புக்கொள்கிறார். அதன் பிறகு சிங்கள இனவெறியர்கள் தாக்குதலைத் தொடங்குகிறார்கள். இந்த வீடியோக்களை சில தமிழர்களும் பகிர்ந்தனர். ஏற்கெனவே இருந்த சந்தேகங்களும் பகையும், முஸ்லிம்களுக்கு எதிராக ஏனைய தமிழர்கள் சிலரையும் பேசவைத்தன.

Anti Muslim riots flare anew in Sri Lanka despite emergency

சிங்கள இனவெறியின் பக்கம் தமிழர்களை வைத்துக்கொண்டு, முஸ்லிம்களைத் தாக்கி அடக்குவதுதான் இனவாதத்தின் பாலபாடமே! 1915-ம் ஆண்டில் இலங்கையின் முதல் இனக்கலவரம் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது. அப்போது சனாதனத் தமிழர்களைத் தன் பக்கம் வைத்துக்கொண்டது சிங்கள இனவாதம். ஆங்கிலேயே அரசு கைதுசெய்த சிங்கள இனவெறித் தலைவர்களை, சிறை மீட்டு வந்தார் தமிழ்த் தலைவரான இராமநாதன். அப்போது சிங்களவர்கள் அவரை கொழும்பு வீதிகளில் தேரில் வைத்து அழைத்துச் சென்றனர். பிறகு, அதே வீதிகளில் 1956-ம் ஆண்டிலும் 1978-லும் 1983-லும் தமிழர்கள் உயிரோடு எரிக்கப்பட்டர்கள்; அடித்து விரட்டப்பட்டார்கள்.

தமிழருக்கு எதிரான இந்தத் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்ட பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லிம்களை தன் பக்கம் சேர்த்துக்கொள்ளத் தொடங்கியது சிங்களப் பேரினவாதம். ஈழத்தில் ஆயுதப் போராட்டம் தொடங்கியதும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களையும் ஏனைய தமிழர்களையும் பிரிப்பது இலகுவானதாக மாறியது. முதிர்ச்சியற்ற தமிழ்ப் போராளிகளும் பொறுப்பற்ற இஸ்லாமியத் தலைமைகளும் தவறிழைத்ததன் விளைவு பகைநிறை சமூகமாக பக்கத்துப் பக்கத்து ஊர்களில் இரு சிறுபான்மைச் சமூகமும் வாழத் தொடங்கின. ஆயுதப் போராட்டத்தில் இணைந்திருந்த பல முஸ்லிம் இளைஞர்கள் தமிழ்ப் போராளிகளிடமிருந்து அந்நியப்படத் தொடங்கினர்.

Anti Muslim riots flare anew in Sri Lanka despite emergency

நீண்டகாலம் கிழக்கானாக வாழ்ந்த எனக்கு, முஸ்லிம்களுக்கும் ஏனைய தமிழருக்கும் இடையில் நிகழ்ந்த கோரமான கலவரங்கள் புதிதல்ல. 80-களின் நடுப்பகுதியில் என் முதல் இடப்பெயர்வு தமிழ் பேசும் இஸ்லாமியருக்கும் ஏனைய தமிழருக்கும் இடையிலான பகையின் வெளிப்பாடே! அப்போது சிங்கள ஆயுதப்படை முஸ்லிம்களுக்கு துணை நின்றது. பகையும், அதனால் உருவான நிரந்தரப் பிரிவும் படுகொலைகளும் பழக்கப்பட்ட ஒன்றுதான். ஏறாவூரில் முஸ்லிம் ஊர்க்காவல் படையினரைக்கொண்டு சிங்கள ராணுவத்தின் துணையோடு எனது வீடு சூறையாடப்பட்டு, எங்கள் ஊர் எரிக்கப்பட்டு, நாங்கள் காடுகளில் தஞ்சமடைந்த சில மாதங்களில் கொடுரமான பள்ளிவாசல் படுகொலைகள் புலிகளால் நிகழ்த்தப்பட்டன. தொடர்ந்து முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதம் வழங்கி துணைக் குழுகளைப்போல செயல்படுத்தியது இலங்கை ராணுவம். எல்லாம் முடிந்து பிறகு பரஸ்பர மன்னிப்புக் கோரல்கள் சில இடங்களில் நிகழ்ந்தபோதும், வடுக்களை முழுமையாகக் களைய முடியவில்லை.

போர் முடிந்த பிறகும்கூட இன முரண்பாட்டைப் போக்குவதற்கான முயற்சிகள் பெருமளவில் நடக்கவில்லை. ஆழப்பதிந்த வடுக்களும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் சிங்கள அரசிடம் சரணாகதியடைந்ததும் இலங்கையின் கிழக்கில் தமிழர் - முஸ்லிம் ஒற்றுமையை உருவாக்கும் பொறிமுறைகளை நோக்கிச் செல்வதைத் தடுத்தது. இதைத்தான் சிங்கள பௌத்த தேசியவாதம் பயன்படுத்திக்கொள்ள நினைத்தது. `பொதுபல சேனா' கிழக்கில் நேரடியாகக் களத்தில் இறங்கியது. சிங்களக் கடும்போக்கு இயக்கமான `பொதுபல சேனா' மஹிந்த ராஜபக்‌ஷே ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை உருவாக்கி, பல முஸ்லிம் ஊர்களுக்கு தீ வைத்திருக்கிறது. இப்போது புதிய ஆட்சியில் அது தமிழர்களையும் கூட்டுச் சேர்க்க முயல்கிறது. பள்ளிவாசல்களை புதிதாகக் கட்டுவதையும் இந்து கோயில் காணிகள் முஸ்லிம் பகுதிகளாக மாறிய சில சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி இஸ்லாமியரைத் தனிமைப்படுத்தினர். இந்துக்களுக்காகக் குரல்கொடுக்க சிங்கள பெளத்த பேரினவாத இயக்கமான பொதுபல சேனாவின் பிக்குக்கள் களம் இறங்கினர். குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் இந்துகளை தமிழ் இஸ்லாமியர்களிடமிருந்து தனிமைப்படுத்த முனைந்தனர்.

Anti Muslim riots flare anew in Sri Lanka despite emergency

கிழக்கில் பெரும்பான்மை பெற்றுவரும் முஸ்லிம்களின் மக்கள்தொகைப் பெருக்கம் மீது சாதாரண தமிழ் மக்களிடத்தில் சலசலப்பு இருக்கிறது. புலிகளிலிருந்து வெளியேறி இலங்கை அரசு சார்ந்து இயங்கும் கருணா, பிள்ளையான் போன்றோர் வெளிப்படையாகவே முஸ்லிம் எதிர்ப்பைப் பேசிவருகின்றனர். இதேபோல மட்டக்களப்பு எம்.பி யோகேஸ்வரன் போன்றோரால் முன்னெடுக்கப்படும் சிவசேனா போன்ற அமைப்புகளும் இந்து இஸ்லாமிய எதிர்ப்பைக் கூர்மையாகவே செய்கிறது. மறுபுறத்தில் இஸ்லாமியப் பழைமைவாதம் கிழக்கில் வெகுவாகத் தாக்கம் செலுத்துகிறது. அது தமிழ் பேசும் இரு சமூகங்களுக்கிடையிலான பண்பாட்டுப் பழக்கவழக்கங்களில் உள்ள ஒற்றுமைகளைச் சிதைத்து இஸ்லாமிய தனித்துவ அடையாளத்தை ஏற்படுத்துகிறது. இதைப் பயன்படுத்திக்கொண்ட சிங்களத் தரப்பு, கிழக்கில் சிங்கள பெளத்தப் பெரும்பான்மையை உருவாக்க தமிழர்களை துணை சேர்த்தது. முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை நடத்தும்போது தமிழர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்தாலே போதும் என்கிற தேவை சிங்கள இனவாதத்துக்கு இருக்கிறது. அப்படித்தான் தமிழருக்கு எதிரான போரில் முஸ்லிம்களை இனவாதம் வைத்திருந்தது.

இந்தப் பின்னணியில் தற்போது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கலவரங்கள் முஸ்லிம் மக்களை அடித்து அடக்கிவைப்பதற்கான நீண்டகாலத் திட்டத்தின் பகுதியே. சிங்களவர்களுக்கு அச்சம்தரும் தமிழ்த் தரப்பான விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்டிவிட்டாச்சு. இப்போதுள்ள தமிழ்த் தலைமைகள், அரசோடு கூட்டு உள்ளவர்கள். ஆகவே, கடந்த 30 வருடப் போர்க்காலத்தில் ஒப்பீட்டளவில் அதிக இழப்புகளைக் கண்டிராத முஸ்லிம்களின் வளர்ச்சியைத் தடுத்து அவர்களை பலமிழக்கச் செய்வது சிங்கள பெளத்த பெரும்பான்மை இனவெறிக்குத் தேவையானது.

மறுவளத்தில் சரியான வலுவான தலைமை இல்லாமல் பல கட்சிகளாக முஸ்லிம் அரசியல் பிரிந்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸைத் தோற்றுவித்த எம்.ஹெச்.எம்.அஸ்ரஃப்க்குப் பிறகு கிழக்கு முஸ்லிம்களுக்கு வலுவான, தெளிவான தலைமை இல்லை. 1977-ம் ஆண்டில் தமிழீழப் பிரகடனத்தை முன்னிறுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலைச் சந்தித்தபோது அதன் பிரசாரத்துக்குப் பொறுப்புவகித்த அஸ்ரஃப், பின்னாளில் முஸ்லிம்களுக்குத் தனியாகக் கட்சி தொடங்கினார். இப்போது உள்ள சூழலில் வலுவற்றத் தலைமை இல்லாத நிலையில் முஸ்லிம் இளைஞர்கள் தங்களையும் தங்கள் மக்களையும் தற்காத்துக்கொள்ளவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவார்கள்.

இப்போது பல இடங்களில் மக்களின் உயிர்களைப் பாதுகாக்க, கொலை வெறியோடு தீ வைத்துவரும் இனவெறிக் கும்பலை எதிர்த்துத் திருப்பியடிக்க முஸ்லிம் இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். 1956-ம் ஆண்டில் தமிழருக்கு எதிரான கலவரங்களின்போது தமிழர்களும் இதே தற்காப்புப் பொறிமுறையையே கையில் எடுத்தனர். தமிழ்ப் பகுதிகளின் எல்லையோரங்களில் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் தமிழ் கிராமங்களைத் தாக்கத் தொடங்கியபோது ஒருகட்டத்தில் தமிழர்கள் தற்காப்புத் தாக்குதலை நிகழ்த்தினர். இப்போது கலவரம் தொடங்கிய அம்பாறை மாவட்டம் ஒருகாலத்தில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்த மாவட்டம். தொடர்ந்து நடந்த சிங்களக் குடியேற்றங்களால் தமிழர்கள் சிறுபான்மையாகினர். அப்போது நடந்த கலவரங்களில் தமிழர்கள் திருப்பியடிக்க ஆரம்பித்ததும் சிங்களக் கும்பல் தப்பியோடினர்.

Anti Muslim riots flare anew in Sri Lanka despite emergency

இப்போது பதிலடியாக முஸ்லிம்கள் சிலர் தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிங்களவர் ஒருவர் இறந்திருக்கிறார். இறந்த உடல் பல கோணங்களில் படம்பிடிக்கப்பட்டு சிங்கள மக்களிடம் இனவாத வாசகங்களுடன் பரப்பப்படுகிறது. முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களை நாடு முழுவதும் தொடர இதை இனவெறியாளர்கள் பயன்படுத்துகின்றனர்.

இப்படித்தான் 1983-ம் ஆண்டு கலவரத்துக்கும் முன்னர் இனவாதிகளால் சிங்கள மக்கள் தயார்ப்படுத்தப்பட்டனர். 1983 ஜூலையில் புலிகளால் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட சிங்களச் சிப்பாய்களின் உடல் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டது. மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இனவெறி ஊட்டப்பட்டது. அதன் பிறகுதான் கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட அந்தக் கலவரத்தின்போதும் அரசு எதுவும் செய்யாது இருந்தது. அப்போது பொலனறுவையில் ஒரு குட்டி அரசியல்வாதியாக இருந்த இன்றைய அதிபர் மைத்திரிக்கு, இது தெரியாமல் இருக்கலாம். ஆனால், அப்போது அமைச்சராக இருந்த இன்றைய பிரதமர் ரணில், எல்லாம் அறிவார். அடுத்து வந்த 25 வருடங்களில் நாடு சந்தித்த அழிவுக்குக் காரணமான இனவாதத்தை யார் முன்னெடுக்கிறார்கள் என்ற வரலாற்றை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்!


டிரெண்டிங் @ விகடன்