வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (07/03/2018)

கடைசி தொடர்பு:23:00 (07/03/2018)

தடுப்பணைகளை தகர்ப்போம்!" - தமிழக-கேரள எல்லையில் திமிறிய தமிழர்கள்.

சிறுவாணி தடுப்பணை போராட்டம்

"கேரள அரசு, சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சி செய்து வரும் பகுதியைப் பார்வையிடப் போகிறோம்" என்ற முழக்கத்தோடு கேரளாவுக்குள் நுழைய முயற்சி செய்த தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியையும் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவானி ஆற்றின் குறுக்கே தொடர்ச்சியாக அரசு தடுப்பணைகளை கட்டி வருகிறது கேரள அரசு. ஏற்கெனவே தேக்குவட்டை  மஞ்சகண்டி ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது தடுப்பணையை பவானி ஆற்றின் கிளை நதியான சிறுவாணியில் நிறுவ முயற்சி செய்கிறது கேரளா. கோட்டத்துறை அருகே உள்ள சோலையாறு என்ற இடத்தில்தான் தடுப்பணை கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்டன.

இதனையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில், சிங்காநல்லூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், ஆதி தமிழர் பேரவை நிறுவனர் ஆதியமான் மற்றும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ, விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி கேரளாவில் கட்டப்படும் தடுப்பணையைப் பார்வையிடப்போவதாகக் கிளம்பினார்கள். இதனால், தமிழக கேரள எல்லையில் பெரும் பதற்றச்சூழல் உருவானது. தமிழக எல்லையான ஆனைக்கட்டியில் தமிழக போலீஸார் குவிக்கப்பட்டனர். மூன்று இடங்களில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. தடுப்பணையைப் பார்வையிட சென்ற அனைத்துக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளை ஆனைக்கட்டியிலேயே தடுத்து நிறுத்தியது தமிழக போலீஸ்.

அப்போது, சிறுவாணியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இந்தத் தடுப்பணையால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். என்று முழங்கியவர்கள் திடீரென்று, "தடுப்பணையைத் தகர்ப்போம்"என்ற கோஷத்தோடு திமிறிக்கொண்டு கேரள எல்லைக்குள் நுழைய முயன்றார்கள். அவர்களை உடனடியாக தடுத்துநிறுத்தி கைது செய்தது தமிழக போலீஸ்.