Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிலையாக நின்று வழிகாட்டும் ஈ.வெ.ரா, 'பெரியார்' ஆனது எப்போது?

திரிபுரா தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து அங்கு சில பாரதிய ஜனதா கட்சியினர் ரஷ்யப் புரட்சியாளர் லெனின் சிலையை அகற்றினார்கள். அது தொடர்பாக பாஜக  தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின்  முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த பதிவால், கண்டனக் குரல்கள் எழுந்தது. பதிவான சில நிமிடங்களிலேயே அந்த செய்தி அகற்றப்பட்டது. அது தனது பக்கத்தை நிர்வகிக்கும் அட்மின் பதிவிட்டிருந்ததாகவும் அதனால்தான் அதை நீக்கியிருந்ததாகவும் ராஜா தனது விளக்கத்தில் தெரிவித்திருந்தார். இது ஒருபக்கமிருக்க தமிழகம் எங்கும் இருக்கும் பலபேர் தனது முகநூலில் பெரியார் பற்றிய பதிவுகளை இது தொடர்பாகத் தொடர்ந்து பதிவிட்டார்கள். 

பெரியார் யார்?. ``இருந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்ல வேண்டும். இவர்போல யார் என்று ஊர்சொல்ல வேண்டும்'' என்ற பாடல் வரிகள் சினிமாவில் எம்.ஜி.ஆருக்காக எழுதப்பட்டிருக்கலாம். ஆனால், நிஜத்தில் வாழ்ந்து மறைந்த பல தலைவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த வரிகள் இன்றைக்கும் பொருந்தும். அத்தகைய பெருமைக்குரியவர்களில் முதன்மையானவர் `பெரியார்'. 

பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வெ.ரா.


 

 

அவர், மறைந்து 45 ஆண்டுகளுக்குப் பின்னரும் தாம்கொண்ட கொள்கைகளாலும், அடித்தட்டு மக்களாக வாழ்ந்த எளியவர்களுக்குப் பெற்றுத் தந்த உரிமைகளாலும், பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராகவும், வர்ணாசிரமத்தைத் தூக்கிப்பிடித்து அலைந்துகொண்டிருப்போருக்குச் சிலையாக நிற்பதன் மூலம் அவர்களைத் தூங்கவிடாமல் செய்து கொண்டிருக்கும் பெரியவர்தான் ஈ.வெ.ராமசாமி என்ற பெரியார்.  

 தென்னகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் ராமசாமியாக வலம் வந்தவர், 80 ஆண்டுகளுக்கு முன் பெரியாராக மாறியது எப்படி என்பதை பார்ப்போம். 1924-ம் ஆண்டு திருவண்ணாமலையில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் மாநாட்டுக்கு ஈ.வெ.ரா தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், சமூகச் சீர்திருத்தம், சுயமரியாதை, பிராமணர் - பிராமணர் அல்லாதார் பிரச்னைகள் பற்றிய கருத்துகளை வலுவாக வலியுறுத்தி வந்தார். 

 இதன் தொடர்ச்சியாக 1925-ல் காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தினை வலியுறுத்தி ஈ.வெ.ரா கொண்டுவந்த தீர்மானத்தை மாநாட்டுத் தலைவரான திரு.வி.க அனுமதிக்க மறுத்துவிட்டார். இதனால் கோபம்கொண்ட அவர், ``இனி காங்கிரஸை ஒழிப்பதே  என் முதல் வேலை'' எனக் கூறிவிட்டு மாநாட்டிலிருந்து வெளியேறினார். 

 காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஈ.வெ.ரா தனது கொள்கைகளைப் பரப்புவதற்காக, `குடியரசு' என்ற வார இதழைத் தொடங்கினார். சாதி ஒழிப்பு, கலப்புத் திருமணம், விதவைத் திருமணம், புராண எதிர்ப்பு போன்றவற்றை வலியுறுத்தி அந்த இதழில் கட்டுரைகள் எழுதினார். 1929-ல் மலேசியாவுக்குச் சென்றும் தனது கொள்கைகளைப் பிரசாரம் செய்தார். தொடர்ந்து எகிப்து, கிரீஸ், துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுக்கல் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்றும் தனது கொள்கைகள் குறித்து உரையாற்றினார். 1932 ஜூன் 20-ல் இங்கிலாந்தில் கூடியிருந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

காமராஜருடன் பெரியார்.

 மறைமலையடிகளாரின் மகள் நீலாம்பிகை தலைமையில் 1938-ம் ஆண்டு நவம்பர் 13-ல் `தமிழ்நாடு பெண்கள் மாநாடு' சென்னையில் நடந்தது. இந்த மாநாட்டில் டாக்டர் தர்மாம்பாள், ராமாமிர்தம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உலகெங்கிலும் சென்று பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராக முழக்கமிட்டு வந்த ஈ.வெ.ரா-வுக்கு, இந்தப் பெண்கள் மாநாட்டில்தான் `பெரியார்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

25 வயதில் ஆன்மிகத்தில் நாட்டம்கொண்டு சாமியாரான ஈ.வெ.ரா., காசியைப் புனிதமான இடமாக நம்பியிருந்தார். அங்கு சாமியார்கள் ஈடுபட்ட காரியங்களைக் கண்டு மனம் வெறுத்து தனது சாமியார் கோலத்தைக் கைவிட்டார். 

 காசியில் சாமியாராக, காங்கிரஸ் கட்சியில் கதர் மூட்டையைச் சுமந்து சென்று விற்பவராக, வைக்கத்தில் உரிமை மறுக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டவர்களின் வீரராக, தமிழகத்தில் மூடநம்பிக்கைகளை முடக்கிவைத்தவராக வலம் வந்த ஈ.வெ.ரா., இன்றும் சிலைகளாக நின்று வழிநடத்திக்கொண்டிருக்கிறார். அந்தப் பெரியாரின் சிலை, சிலரது கண்களை உறுத்திக்கொண்டிருப்பதன் மூலம் அவர் இன்றும் இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதே உண்மை.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ