வெளியிடப்பட்ட நேரம்: 20:41 (07/03/2018)

கடைசி தொடர்பு:20:41 (07/03/2018)

விகடன் ஆக்‌ஷன்... அரசு ரியாக்‌ஷன் அம்மா குடிநீரைப் பயன்படுத்தும் அரசு!


‘அம்மா’வின் பக்தர்கள் உணர்ச்சிகரமாக ஜெயலலிதா பிறந்தநாளைக் கொண்டாடினார்கள். ஆனால், ‘அம்மா உணவகம்’, ‘அம்மா குடிநீர் திட்டம்’ என ‘அம்மா’ பெயரில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை எல்லாம் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடர்ந்து அம்பேல் ஆக்கிக் கொண்டுள்ளனர் ஆட்சியாளர்கள். இதையெல்லாம் ஜூனியர் விகடன் இதழ் தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டுள்ளது. இந்நிலையில், அம்மா குடிநீர் திட்டம் பற்றிய கட்டுரைக்கு, அதிரடியாக ரியாக் ஷன் காட்டியுள்ளது தமிழக அரசு.

Amma Kudineer

அம்மா குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டுப்பெற்ற தகவல்களை வைத்து, 28/-02/-18 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அரசுத் துறைகளின் தேவைக்காக அம்மா குடிநீர் வாங்கப்படுகிறதா?’ என்ற கேள்விக்கும், ‘அம்மா குடிநீர் பாட்டில் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் எவ்வளவு?’ என்ற கேள்விக்கும் நேரடியான பதில்களைத் தராமல், ‘தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்களில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது’ என்று சம்பந்தமே இல்லாமல் பதில் தந்தது தமிழக அரசு. இதன் மூலம் அரசு சார்பில் நடைபெறும் விழாக்கள், கருத்தரங்குகள், கூட்டங்களுக்கு அம்மா குடிநீர் பயன்படுத்தப்படுவதில்லை என்பது தெரியவந்தது. அதாவது, அமைச்சரவைக் கூட்டங்கள், அரசு விழாக்கள், துறைரீதியான ஆய்வுக்கூட்டங்கள், அரசு செயலாளர்களின் அலுவலகங்கள் ஆகியவற்றில் தனியார் நிறுவனங்களின் குடிநீர் பாட்டில்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன என்பதும் புலனாகியது. அம்மா குடிநீரின் விலை 10 ரூபாய்தான். ஆனால், தனியார் குடிநீர்... தயாரிப்பு நிறுவனங்களைப் பொறுத்து, 20 ரூபாய்க்கும் மேல்கூட விற்கப்படுகிறது. இதனால், அரசுத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, அரசாங்கத்துக்கும் கூடுதல் செலவு என்பதைத்தான் ஜூனியர் விகடன் வெளிச்சமிட்டிருந்தது. 
அந்தக் கட்டுரை வெளியான நிலையில், தற்போது அரசுத்துறையினர் அம்மா குடிநீரைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, மார்ச் 5 முதல் 7 வரையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் அம்மா குடிநீரைத்தான் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் என அனைவருக்கும் வழங்கியுள்ளனர்.

தொடரட்டும் இந்த மாற்றம்!
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க