வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (07/03/2018)

கடைசி தொடர்பு:23:30 (07/03/2018)

ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுத்திய நடிகர் மீது வழக்கு!

நெல்லையில் நடந்த நிகழ்ச்சிக்காக வருகை தந்த நடிகர், அனுமதி பெறாமல் வாகனங்களில் பேரணியாகச் சென்று போக்குவரத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதால் அவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

நடிகர் ஏற்படுத்திய நெருக்கடி

அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் மூர்த்தி. இவரது தாத்தா சேதுராம பாண்டியன். இவர் ஒரு சமுதாய அமைப்பின் தலைவராகச் செயல்பட்டார். அவரது 3-வது நினைவு தினம், நெல்லை சி.என்.கிராமத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நடிகர் கருணாஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 

சேதுராம பாண்டியனின் நினைவு தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்சிகளும் நடைபெற்றன. இதில் பங்கேற்க வருகை தந்த திரைப்பட நடிகரான ஆர்.கே.சுரேஷ் நூற்றுக்கும் அதிகமான வாகனங்கள் புடைசூழ சாலையில் வலம் வந்தார். அதனால் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டது. அனுமதியில்லாமல் திடீரென வாகனங்களில் ஊர்வலமாக வந்ததால் காவல்துறையினரும் செய்வது அறியாமல் திகைத்தனர். 

இதனிடையே, வாகனங்களுக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கிக்கொண்டது. நடிகர் சுரேஷுடன் வந்தவர்கள் குறுக்கும் நெடுக்குமாக வாகனங்களில் சென்றதால் போக்குவரத்தை சீர் செய்ய போலீஸார் சிரமப்பட்டார்கள். நீண்ட நேரத்துக்குப் பின்னரே போக்குவரத்து  சரிசெய்யப்பட்டு ஆம்புலன்ஸ் அனுப்பிவைக்கப்பட்டது. அதனால் விழாவுக்கு ஏற்பாடு செய்த அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகத் தலைவர் மூர்த்தி, அமைப்புச் செயலாளர் நயினார், நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் மீது அனுமதியின்றி வாகனங்களில் ஊர்வலமாகச் சென்று பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக நெல்லை போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.