நெல்லையில் 5 பீடி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

நெல்லையில் உள்ள 5 பீடி நிறுவனங்களில் வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்தத் தகவலைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளனர்.

அதிரடி சோதனை

நெல்லை மாவட்டம் முழுவதும் 5 லட்சத்துக்கும் அதிகமான பீடித் தொழிலாளர்கள் உள்ளனர். அதனால், ஏராளமான பீடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பல்வேறு பீடிக் கம்பெனிகளில் வருமான வரி ஏய்ப்பு நடைபெறுவதாக காவல்துறைக்குத் தொடர்ச்சியாக புகார்கள் வந்தன. அதனால் பீடி நிறுவனங்களில் சோதனை நடத்த வருமானவரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். 

அதனைத் தொடர்ந்து நெல்லை, மதுரை, நாகர்கோவில் ஆகிய இடங்களிலிருந்து 50-க்கும் அதிகமான வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் நெல்லைக்கு வந்தனர். உதவி ஆணையர் தலைமையில் வந்த அலுவலர்கள், 10 இன்னோவா கார்கள் 4 டெம்போ டிராவலர் வாகனங்களில் பீடி நிறுவனங்களின் அலுவலகத்துக்குச் சென்று சோதனை நடத்தினார்கள். காலை 10 மணிக்குத் தொடங்கிய சோதனை இரவு 7 மணியைக் கடந்தும் நடைபெற்றது. 

அலுவலகக் கணக்குகள், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்த அதிகாரிகள், உரிய விளக்கங்களை பீடி நிறுவன அதிபர்களிடம் கேட்டு விளக்கம் பெற்றனர். இந்தச் சோதனை ஒரே நேரத்தில் நடைபெற்றதால் பீடி நிறுவனங்களின் பணிகள் அனைத்தும் முடங்கின. அத்துடன், பீடித் தொழிலாளர்களிடம் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த ஆய்வின்போது, வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் கிடைத்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சோதனையைத் தொடர்ந்து பீடி நிறுவனங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!