"ரஜினி எம்.ஜி.ஆர் ஆட்சியென்றால்... நான் மக்களாட்சி!" - ரஜினியின் 'எம்.ஜி.ஆர் ஆட்சி'க்கு கமல் பதில்

சர்ச்சைகளின் ஆதர்ச நாயகனும், பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான ஹெச்.ராஜா, தனது முகநூலில் "தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும்" எனப் பதிவிட்டிருந்தது தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்களும் இதற்குக் கணடனம் தெரிவித்து வருகின்றனர். பெரும் சர்சைக்குரிய இப்பதிவை முகநூல் பக்கத்திலிருந்து ஹெச்.ராஜா நீக்கியதும், அதற்கு வருத்தம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

கமல்

இது தொடர்பாக 'மக்கள் நீதி மய்ய'த்தின் சார்பில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தனது கண்டனத்தைத் தெரிவித்தார். இதைப்பற்றித் தொடர்ந்து பேசிய கமல், "ஐயா, பெரியாரைப் பற்றிய கூற்று கீழ்த்தரமானது. சட்ட வல்லுநர்களிடம்தான் கேட்க வேண்டும் அது தண்டனைக்குறியதா என்று... அப்படியென்றால், அது தண்டிக்கப்பட வேண்டிய கூற்று. 

இந்த மாதிரி கலக வார்த்தைகள் பேசுவது ஏன் என்று நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கெடு கடந்துகொண்டிருக்கிறது என்பதை மறக்கடிக்கச் செய்யும் திசை திருப்பலாகவே இதை நான் பார்க்கிறேன். நமது கவனம் அதிலிருந்து திரும்பக் கூடாது. 

பெரியாரின் உயரம் அதிகமானது. அவரை யாராலும்  தொட்டுவிட முடியாது. பெரியார் சிலைகளுக்கு அரசு பாதுகாப்பு கொடுப்பதற்குப் பதிலாக அப்படிப் பேசுபவர்களுக்கு அரசு கொடுக்கலாம். ஏனெனில், அவர்களுக்குத்தான் பாதுகாப்பு தேவைப்படும். பெரியாரின் கௌரவத்தையும், அவரது சிலைகளையும் தமிழர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
 
மேலும் ஹெச்.ராஜா முகநூல் பதிவை எடுத்துவிட்டதாகக் கூறுவதைப் பற்றியும் வருத்தம் தெரிவித்ததைப் பற்றியும் கூறிய கமல், "ராஜா வருத்தம் மட்டுமே தெரிவித்துள்ளார். அது ஏற்புடையதல்ல. தற்போதுள்ள சூழலில் அவர் மன்னிப்பு கேட்டாலும் ஏற்போமா என்பதையும் யோசிக்க வேண்டும். வார்த்தைகள் அம்பு மாதிரி... ஏற்படுத்திய காயம், காயம்தான். வருத்தம் தெரிவித்ததையே ஏற்கவில்லை என்ற நிலையில், அவரது முகநூல் மேலாளர் இப்பதிவு போட்டார் என்ற நொண்டிச் சாக்கை எப்படி ஏற்க முடியும்." எனக் கூறினார்.    

ஹெச்.ராஜா

இந்த விஷயத்தில் தமிழக அரசு இதைத் தட்டிக் கழிக்கிறதா, அரசின் நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது என்ற கேள்விகளுக்குப் பதிலளித்த கமல்,"இதற்கு முன் இந்த அரசு எப்படிச் செயல்படாமல் இருந்ததோ, அதைத்தான் இந்த விஷயத்தில் செய்து வருகிறது. செயல்படாமல் இருப்பதுதான் இந்த அரசின் குணாதிசியமே. இந்த விஷயத்தில் தட்டிக் கழிக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், காவிரி மேலாண்மையைத்தான் தட்டிக் கழிக்கிறார்கள். அதைக் கடந்துவிட்டோம் என எண்ணுகிறார்கள். அதை நாம் கடக்கவில்லை காவிரி விஷயத்தில் கெடுவைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறோம். 'மத்திய அரசின் தூண்டுதலில் ராஜா இதைச் செய்கிறாரா?' என்ற கேள்விக்கு, 'அப்படிக்கூட இருக்கலாம். ஆனால் இப்போது அவர்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று கூறி வருகிறார்கள் 

சகிப்புத்தன்மை பற்றி கமல் பேசும்போது, நண்பர்களை நாம் ஏற்றுக்கொள்வோமே தவிர சகித்துக்கொள்ள மாட்டோம். சகிப்பு என்ற வார்த்தை தவறானது. ஒரு இஸ்லாமியரை, ஒரு இந்துவை... அவரவர் எதுவோ, அதுவாகவே ஏற்றுக் கொள்வோம். ஒரு விஷயத்தை சகித்துக்கொள்வது நமக்குத் தலைவலிதான்." என்றார், கமல்ஹாசன். 

இதே சந்திப்பில், ரஜினி சொன்ன 'எம்.ஜி.ஆர் ஆட்சி' குறித்த கேள்விக்குப் பதில் சொன்ன கமல், ''நான் மக்களாட்சி அமைப்பேன்!" என்றார்.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!