வெளியிடப்பட்ட நேரம்: 00:20 (08/03/2018)

கடைசி தொடர்பு:15:41 (09/03/2018)

உஷாவின் உயிரை திருப்பித் தரமுடியுமா ?... ஹெல்மெட் சோதனையால் அடுத்தடுத்து பெண்கள் பலி….

விடிந்தால் மகளிர் தினம் ஆனால் திருச்சி திருவெறும்பூர் சாலையில் காவல்துறையின் அதிகார திமிருக்கு அப்பாவி கர்ப்பிணி பெண் ஒருவர் பலியான சம்பவத்தால் அப்பகுதி மக்கள்  கொதித்துப் போய் கிடக்கிறார்கள்.

உஷாதிருச்சி மாவட்டம் முழுவதும் போலீஸார் வாகனச் சோதனை என்கிற பெயரில் பொதுமக்களுக்குத் தொந்தரவுகள் தருவதாகக்  குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, உய்யக்கொண்டான் திருமலை அருகிலுள்ள செங்கதிர்ச்சோலை கிராமத்தைச் சேர்ந்த எம்.டெக். பட்டதாரியான சந்தோஷ்குமார் என்பவர், தனது நண்பர் பொறியியல் பட்டதாரி பாலசந்திரனுடன் திருச்சி - வயலூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருக்கும்போது, ஆவணங்கள் இருந்தும் அவர்கள்மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதைத் தட்டிக்கேட்ட அப்பகுதி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர்கள்மீது வழக்குப் பதிவும்செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில், அத்துமீறி நடந்துகொண்ட  காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகிறது. அதேபோல் திருச்சி திருவெறும்பூர் போலீஸார், ஹெல்மெட் போடவில்லை என கார் டிரைவருக்கு அபராதம் விதித்த கொடுமைகள் திருச்சியில் நடந்துள்ளது. இந்நிலையில்தான் உஷாவின் உயிரும் பறிபோயுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை அடுத்த சூலமங்கலம் புதுத்தெருவைச் சேர்ந்த துரைக்கண்ணு என்பவரின் மகனான ராஜா, இன்று மாலை 7மணியளவில் தனது 3மாத கர்ப்பிணி மனைவியை தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு, தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி வந்துக்கொண்டிருந்தார். அவரது பைக் திருச்சி துவாக்குடி டோல் பிளாசா அருகே வந்துக்கொண்டிருந்தபோது அங்கு சோதனைக்கு நின்றுக்கொண்டிருந்த டிராபிக் போலீஸார், அவர்களை மறித்தார்கள். ஓரமாக வண்டியை நிறுத்துவதற்குள், அவர்கள் முன்புறம் வைத்திருந்த டேபிள் கிரைண்டரை பிடித்தார்கள். சட்டையை பிடித்து போலீஸார் இழுத்ததால் வண்டியை நிறுத்தாத ராஜா, பைக்கை விரட்டியுள்ளார். அதனைப்பார்த்த போலீஸ் ஆய்வாளர் தான் வைத்திருந்த ஸ்கூட்டியில் அவர்களை விரட்டிச் சென்றார். போலீஸார் தன்னை விரட்டி வருவதை கண்ட ராஜா, போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி  திருவெறும்பூர்  கணேஷா  ரவுண்டானா பகுதி அருகே சென்றுக்கொண்டிருந்தபோது, வண்டியை நிறுத்தியுள்ளார். ஆனால், பின்னால் விரட்டி வந்த இன்ஸ்பெக்டர் காமராஜ், வந்த வேகத்தில் அவரின் வாகனத்தை எட்டி உதைக்க, நிலைதடுமாறி ராஜாவும், பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்த உஷாவும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

இதில் ராஜாவுக்கு தலையிலும் காலிலும் அடிப்பட்டது. அதேபோல் அவரின் மனைவி உஷா, கீழே விழுந்ததில்,சரஸ்வதி அவர் மீது அந்த வழியே வந்த வேன் ஒன்று மேலே ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இந்த சம்வத்தைக் கண்டித்து, அப்பகுதியில் 3ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள், திரண்டு 3மணி நேரத்துக்கும் மேலாக சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும் பொதுமக்களுக்கு இடையே மோதல் ஏற்பட கல்வீச்சு நடந்தது. இதில் பத்திரிக்கையாளர்கள் உட்பட பலர் காயமடைந்தனர். இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய காவல் ஆய்வாளர் காமராஜ், போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. போராட்டம் நடந்த இடத்திற்கு மாவட்ட எஸ்.பி. சியாஸ் கல்யாண், திருச்சி டி.சி சக்தி கணேஷ் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு நிலவியது. பிரச்னைக்குரிய போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜை கைது செய்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறியும் போராட்டம் தொடர்வதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. திருச்சி தஞ்சாவூர் சாலையில் போக்குவரத்து தொடர்ந்து ஸ்தம்பித்துள்ளது.

இந்நிலையில் இறந்த உஷாவின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அவர் அணிந்திருந்த நகைகளை ராஜாவிடம் ஒப்படைக்கும் போது அவர் உஷாவை உயிரோடு பார்க்க முடியாதா என கதறியதை பார்த்து அப்பகுதியில் உள்ள பலரும் கதறியழுதார்கள்.

இந்நிலையில் போலீஸார், போராட்டக்காரர்களை கலைக்க தடியடி நடத்தினர். இதில் பலருக்கு பலத்த காயம். மேலும் 5பேர் கைதுசெய்யப்பட்டதாக தெரிகிறது.   

இந்நிலையில் உஷாவைப் போன்று ஹெல்மெட் சோதனையினால் மற்றும் ஒரு பெண் பலியான சம்பவமும் பூதாகரமாகி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருச்சி மாநகரில் போலீசார் முன் காஜாபேட்டை பகுதியில் போலீசார் ஹெல்மெட் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்த 2 வாலிபர்கள், பைக்கை நிற்காமல்  பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றனர். அப்போது வாட்டர் டேங்க் வழியாக நடந்து வந்துக்கொண்டிருந்த பாலக்கரை எடத்தெருவைச் சேர்ந்த 25வது வார்டு திமுக வட்ட செயலாளர் முகேஷ் குமாரின் மனைவி சரஸ்வதி என்பவர், மீது பைக் மோதியது. இதில் பின்னந்தலையில் காயமடைந்த சரஸ்வதி, மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சரஸ்வதி 26-ம் தேதி அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதேபோல் அம்மாமண்டபம் காவிரிபாலம் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது ஹெல்மெட் போடாமல், பைக்கில் வந்த மாணவர்கள் 2பேர் போலீஸாருக்கு பயந்து பைக்கை வேமாக ஓட்டிச் சென்றபோது, பைக் காவிரிப்பாலத்தின் தடுப்பு சுவரில் இடித்து கீழே விழுந்தனர். இதில் இருவரும் காயமடைந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் திருச்சியில் தொடர்கதையாகி உள்ளதால் வாகன ஓட்டிகள் திகிலில் உள்ளனர். 

என்னதான் உறுதியளித்தாலும் உஷாவின் உயிரை திருப்பி தந்துவிட முடியுமா..”

நீங்க எப்படி பீல் பண்றீங்க