வெளியிடப்பட்ட நேரம்: 00:40 (08/03/2018)

கடைசி தொடர்பு:11:22 (08/03/2018)

''ஹெச்.ராஜா மீது நடவடிக்கை இல்லை..!'' அமித்ஷா உறுதி

ராஜா அமித்ஷா

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதை வரவேற்றார், பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், ''லெனின் யார், அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்துக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது இன்று. திரிபுராவில் லெனின் சிலை. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ரா சிலை' என்று கூறி  யிருந்தார். கடும் எதிர்ப்பு கிளம்பியதால், பின்னர் அந்தப் பதிவை ராஜா நீக்கிவிட்டார்.  

ராஜாவைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. 'ராஜாவை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்' என்று ஸ்டாலின் கூறினார். 'கையை வைத்துப் பார். சிலையை உடைத்தால் கையை வெட்டுவோம்' என்று வைகோ ஆவேசம் பொங்க கண்டித்தார். பா.ஜ.க தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் ராஜா கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், பா.ஜ.க அலுவலகத்துக்கு வழக்கத்தைவிட,  கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில், பெரியார் சிலை உடைக்கப்பட்டது, பெரியார் ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தலைவர்கள் சிலை உடைப்பு விவகாரம்குறித்து டெல்லியில் பா.ஜ.க மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். திரிபுராவில் லெனின் சிலை உடைப்பு, பெரியார் சிலை சேதப்படுத்தியது போன்ற சம்பவங்கள் பா.ஜ.க-வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற கருத்து அப்போது எடுத்துச் சொல்லப்பட்டது. இந்நிலையில், 'தலைவர் சிலைகள்மீது தாக்குதல் நடத்துவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். சிலைகள் உடைப்புகுறித்த தனது அதிருப்தியை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பிரதமர் மோடி தெரிவித்தார். 

இதற்கிடையில், டெல்லியில் பாராளுமன்றத்துக்கு வெளியே பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம்,ஹெச்.ராஜா மீது கட்சி நடவடிக்கை பாயுமா..? என்று கேட்டனர். அதற்குப் பதில் அளித்த அமித்ஷா, ''இல்லை. நாங்கள் நடவடிக்கை எடுக்க மாட்டோம்'' என்றார். 

முன்னதாக, சிலைகள் உடைப்புக்கு ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமித் ஷா, "சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்டமானது. இந்த மாதிரியான விஷயங்களை கட்சி ஒருபோதும் ஆதரிக்காது. பா.ஜ.க-வைச் சார்ந்த யாராவது சிலைகள் உடைப்பது தெரிந்தால், அவர்கள்மீது கடுமையான நடவடிக்கையை கட்சி எடுக்கும். திரிபுரா மற்றும் தமிழ்நாடு கட்சி நிர்வாகிகளிடம் இதுகுறித்து பேசியுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க