வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (08/03/2018)

கடைசி தொடர்பு:02:30 (08/03/2018)

மகளிர் தின கொண்டாட்டத்தில் பாரம்பர்யத்தை மீட்டெடுத்த பள்ளி மாணவிகள் #womensday

உலக மகளிர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் பள்ளி மாணவிகள் முறம், திருகை, உலக்கை மூலம் தானியங்களைப் பிரித்து எடுத்தும், பல்லாங்குழி, தட்டாங்கல், பாண்டி போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 

மாணவிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நாடார் நடுநிலைப்பள்ளியின் வரலாற்று மன்றம் சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில்,  பாம்படம் அணிந்த 5 பாட்டிமார்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். ”திருகையில் பாசிப்பயிறைப் போட்டு திருகையின் கைப்பிடியைப் பிடித்து சுற்ற..சுற்ற.. முழு பச்சைப்பாசிப்பயிறு உடைந்து பருப்பாக கிடைக்கும். உரலில் கம்பு தானியத்தைப் போட்டு இடிக்க.. இடிக்க.., கம்பின் தோல் வெளிவந்து கம்பு அரிசி கிடைக்கும். முறத்தில் நெல், தானியங்கள், பயறு வகைகளைப் புடைத்தால் தூசிகள், கற்கள், பொக்குகள் நீங்கிவிடும்” என பாட்டிமார்கள் ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே செய்து காட்ட, மாணவிகளும் அப்படியே பாட்டிமார்களிடம் செய்து காட்டினார்கள். 

மாணவிகள்

பின், பாண்டி விளையாட்டை  சிரித்த முகத்துடன்  2 பாட்டிமார்கள் விளையாடிக் காட்ட மாணவிகளும் அப்படியே விளையாடினர். 3 பாட்டிமார்கள், பல்லாங்குழி, தட்டாங்கல் ஆகியவற்றை விளையாடச் சொல்லிக் கொடுத்ததும்  கற்பூரமாய்ப் பற்றிக் கொண்டு அப்படியே விளையாடி பாட்டிமார்களையை ஆச்சர்யப்பட வைத்துவிட்டனர் மாணவிகள். இதில், மாணவிகளின் பெற்றோர்களுக்கு பள்ளி வளாகத்தில் கோலப் போட்டிகளும் நடைபெற்றது. இறுதியில் பாட்டிமார்கள் குழுவாக சேர்ந்து தயாரித்த  எள்ளு உருண்டை, சத்துமாவு உருண்டை அனைத்து மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது.  சிறப்பு விருந்தினர்களாக விழாவில் கலந்து கொண்ட பாட்டிமார்கள் அனைவருக்கும் மாணவிகள் பரிசு வழங்கினர். 

மாணவிகள்

“எங்க வீடுகளில் திருகை, உரல், உலக்கை எல்லாம் சும்மா ஒரு ஓரமா இருக்குது. இதுல  எதுவும் அம்மா செய்ய மாட்டாங்க. இந்த கல் சாதனங்களின் பெயரைக் கூட இப்போதான் தெரிஞ்சுக்கிட்டோம். ஒவ்வொன்னும் ஒவ்வொரு தேவைக்காக பாரம்பர்யமாவே பாட்டிமார்கள் பயன்படுத்திக்கிட்டு வந்திருக்காங்க. மிக்சி, கிரைண்டர் வந்ததுக்குப் பிறகு இந்த பாரம்பர்ய கல் சாதனங்களோட பயன்பாடு குறைஞ்சுடுச்சு. திருகையில் எப்படி திரிகணும் என்பதுகூட இந்தகாலத்துல யாருக்கும் தெரிய மாட்டேங்குது. பாட்டிமார்கள் ஒவ்வொரு கல் சாதனத்தையும் காட்டி விளக்கம் சொல்லும் போது கேட்குறதுக்கும், பார்க்குறதுக்கும் ரொம்ப ஆசையா இருக்கு. அதே மாதிரி, பாண்டி, தட்டாங்கல், பல்லாங்குழி விளையாட்டும் செம சூப்பரா இருக்கு. இதையெல்லாம் சொல்லித்தந்த பாட்டிகளுக்கு ரொம்ப தேங்க்ஸ்.” என கோரசாக கூறினர் மாணவிகள். முன்னதாக பாட்டிக்களின் வழிகாட்டலில் மாணவிகள் எடுத்த பயிற்சியைக் காண பள்ளி வளாகத்தில் பெற்றோர் கூட்டம் திரண்டிருந்தது .  

நீங்க எப்படி பீல் பண்றீங்க