'ஹெச்.ராஜாவை சிறையில் அடையுங்கள்' - தூத்துக்குடியில் கம்யூனிஸ்டுகள் கொந்தளிப்பு!

பெரியார் சிலை அகற்றப்படும் என ட்விட்டரில் செய்தி வெளியிட்ட பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் உருவப் படத்தை எரித்து,  அவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வலியுறுத்தி,  தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அ.தி.மு.க, அம்மா அணி, ம.தி.மு.க., ஆகிய கட்சியினர் கண்டன ஆர்ப்பட்டத்தில்  ஈடுபட்டனர்.

கம்யூனிஸ்டுகள்

ஆர்ப்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அர்ச்சுணன், “ சமீபத்தில் நடந்து முடிந்த திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் படைபலம், பண பலம்,  அதிகார அத்துமீறல், தில்லுமுல்லுகள், தேர்தல் ஆணையப் பிரிவினைவாதிகளுடன் கூட்டு, ஆகிய பல்வேறு காரணங்களால் பா.ஜ.க., வெற்றிபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள், கட்சித் தோழர்கள், ஆதரவாளர்கள்மீது வெறித்தனமான தாக்குதலில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., கும்பல் ஈடுபட்டுவருகிறது.

ஆர்ப்பாட்டம்

 கம்யூனிஸ்ட் ஆட்சியில், இதுவரை அமைதியாக இருந்த சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்து, மக்களின் வாழ்க்கையில் பயங்கரவாதச் செயல்களையும் அரங்கேற்றிவருகின்றனர். இந்தியா உட்பட உலகம் முழுவதும் சமாதானம் நிலவ வேண்டும் என்று குரல்கொடுத்த  மாமேதை லெனினின் சிலையைத் தகர்த்தெறிந்துள்ளனர். அந்த மாநில கவர்னர் உட்பட பா.ஜ.க., தலைவர்கள் மமதையுடன் பேசி வருகின்றனர். 

இதற்கு ஆதரவளிக்கும் விதமாக, ஹெச்.ராஜா தன் முகநூல் பக்கத்தில்,  “இன்று லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியன் பெரியாரின் சிலை அகற்றப்படும்” என கருத்து தெரிவித்துள்ளார். சாதியை எதிர்த்துப் போராடிய பெரியாரை, சாதி வெறியன் எனக் குறிப்பிட்டது மட்டுமல்லாமல், அவரது சிலைகள் இடிக்கப்படும் என கூறியிருப்பது வன்முறையைத் தூண்டும் செயல். ஆனால், நான் அந்தப் பதிவை போடவில்லை என மறைக்கிறார். ஏற்கெனவே, ஒருமுறை பெரியாரை செருப்பால் அடிப்பேன் எனச் சொன்னவர்தான் இந்த  ஹெச்.ராஜா. எனவே, அவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும்” என்றார். ஆர்ப்பட்டத்தில் ஹெச்.ராஜாவின் உருவப்படம் மற்றும் பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட படத்தை எரித்தும், பா.ஜ.க-வைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!