''தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது..!' பெருமை அடையும் எடப்பாடி பழனிசாமி

 

எடப்பாடி பழனிசாமி

'தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிர்வகிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என கூறுவதில் நான் பெருமை அடைகிறேன்'' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கோட்டையில் நடந்த கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி-க்கள் மாநாடு நடந்தது. மாநாடு நிறைவாக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர், ''கடந்த மூன்று நாட்களாக நம்மிடையே நடைபெற்ற கருத்து பரிமாற்றம், தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து கொண்டு செல்லும் விதமாக அமைந்தது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கின்றது. இங்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்ட ஒவ்வொரு கருத்தும், ஆலோசனைகளும் மாநில வளர்ச்சியில் உங்களுக்கு உள்ள அக்கறையை அறிந்து கொள்ள எனக்கு கிடைத்த வாய்ப்பாகவே நான் உணர்கிறேன். 

இம்மாநாட்டின் மூலம், இந்த அரசின் கொள்கைகளையும், அரசின் நலத் திட்டங்களையும் முன்னைவிட சிறப்பாக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தையும் நீங்கள் நன்கு உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன். காவல் துறைக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் காரணமாக, தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிர்வகிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என கூறுவதில் நான் பெருமை அடைகிறேன். இதில் உங்கள் அனைவரின் பங்கும் உள்ளது. அதற்காக உங்களை நான் மனதார பாராட்டுகிறேன். 

இங்கு பரிமாறிக் கொள்ளப்பட்ட கருத்துக்கள் ஏழை, எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்ற வழிவகை செய்யும் என நான் உறுதியாக நம்புகிறேன். மக்களைச் சென்றடைய வேண்டிய திட்டங்கள், சரிவர அவர்களை சென்று அடைவதை உறுதி செய்வது, களப் பணியாளர்கள் என்ற அளவில் களப்பணியாளர்கள் ஆகிய உங்களது தலையாய கடமையாகும். ஏனென்றால், ஜனநாயகத்தில் மக்கள்தான் எல்லாமுமே. அவர்களுக்கு சேவை செய்ய உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை, அர்ப்பணிப்பு உணர்வுடன் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்'' என்று பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!