வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (08/03/2018)

கடைசி தொடர்பு:10:53 (08/03/2018)

'வங்கதேசத்தில் தமிழ்ப் பெண் இறந்த விவகாரம்' - திருப்பூர் போலீஸார் தமிழக அரசுக்கு அறிக்கை!

வங்கதேசத்தில் மர்ம மரணமடைந்த அவிநாசி பெண் குறித்து, திருப்பூர் போலீஸார் தமிழக அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.

பூர்ணதேவி

திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்துள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் வசிப்பவர், முருகானந்தம். இவரின் மனைவி செல்வகோமதி. இத்தம்பதிக்கு, தமிழரசன் மற்றும் பூர்ணதேவி என மொத்தம் இரண்டு குழந்தைகள். 12-ம் வகுப்பு முடித்த பூர்ணதேவியை அவரின் பெற்றோர் குடும்ப வறுமையின் காரணமாகப் பனியன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துவிட்டனர். இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு, ஆதித்யா நிட்ஸ் என்ற அந்தப் பனியன் நிறுவனத்தில் தன்னுடன் பணியாற்றிய ரிமுஷேக் என்ற வாலிபருடன் பூர்ணதேவிக்கு காதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு ஜூலை மாதம், தன் வீட்டைவிட்டு வெளியேறி, ரிமுஷேக்குடன் வங்கதேசத்தில் குடியேறினார் பூர்ணதேவி.

 கடந்த பிப்ரவரி 9-ம் தேதி, வங்கதேசத்தில் பூர்ணதேவி உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக அவரது கணவர் ரிமுஷேக், திருப்பூரில் உள்ள பூர்ணதேவியின் பெற்றோருக்கு தகவல் அளித்தார். அதைத் தொடர்ந்து, தன்னுடைய மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, பூர்ணதேவியின் பெற்றோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடத்திலும் புகார் மனு அளித்தனர்.  அதைத் தொடர்ந்து பூர்ணதேவியின் மரணம் தொடர்பாக விசாரிக்க, அவினாசி பகுதி காவல் ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, ரிமுஷேக்கின் சொந்த ஊராகக் கருதப்படும் மேற்கு வங்க மாநிலம் சவுத் 24 பரகனாஸ் மாவட்டத்துக்குச் சென்று விசாரணை நடத்தியது. 

ரிமுஷேக் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பதும், அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.  மேலும், வங்கதேச தலைநகர் டாக்காவில் குடும்பத்துடன் தங்கியிருந்த ரிமுஷேக், இந்திய அரசால் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டையைப் போன்று போலி அட்டை தயாரித்து, இந்தியப் பகுதிகளில் பயன்படுத்திவந்ததும் காவல்துறைக்குத் தெரிந்திருக்கிறது. அத்துடன், பூர்ணதேவிக்கு போலி முகவரியைக்கூறி, வங்கதேசத்தில் தங்கவைத்தது, பூர்ணதேவியின் மரணம் எப்படி நிகழ்ந்தது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய அறிக்கையைத் தற்போது தமிழக அரசிடம் வழங்கியிருப்பதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.