''பெரியார் புகழ் காக்கும் ஆர்ப்பாட்டம்..!'' - 'மந்திரி குமாரி' காட்சியை ஞாபகப்படுத்திய ஸ்டாலின்

ஸ்டாலின்

''பெரியாரின் புகழ் காக்கும் பணியில் ஆர்ப்பாட்டக் களமிறங்கியிருக்கும் அனைத்துத் தரப்பினருக்கும் உளமார்ந்த வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்'' என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தி.மு.க., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ''உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் தீட்டும் திராவிட எழுச்சி மடல்'' என்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பல நூறு ஆண்டுகளாக அடக்கி, ஒடுக்கி, ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு, உண்மையான சமூக விடுதலையைப் பெற்றுத்தந்த தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 45 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால், இனப் பகைவர்களுக்கு இன்றைக்கும்கூட அவர் பெயரைக் கேட்டால் அடிவயிறு கலங்குகிறது. நெஞ்சுக்கூட்டில் பயம் எனும் பந்து உருள்கிறது.  திரிபுராவில் நிறுவப்பட்டிருந்த புத்துலகச் சிற்பி லெனின் சிலைகளை, புதிய ஆட்சியாளர்கள் தகர்த்தெறியும் காட்சிகள், இதயத்தை இடிதாக்குவது போல அமைந்துள்ளன.

 தந்தை பெரியார், தனது போராட்டங்களால் நிலைநாட்டிய சமூக நீதிக்கொள்கையின் அடிப்படையில், இடஒதுக்கீட்டு அளவு தமிழ்நாட்டில் 69 சதவிகிதம் என்கிற நிலைக்கு உயர்ந்தது. சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அடிப்படையில், இந்திய அளவில் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் இடஒதுக்கீடு கிடைக்கச்செய்யும் வகையில் துணை நின்றதன் காரணமாக, தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத கொள்கையாக மாறியது.

ஈரோட்டில் பிறந்தவர், அண்ணல் அம்பேத்கர் போன்று, இந்தியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான தலைவராக உயர்ந்து நிற்கிறார். அவருடைய கொள்கைகளும், தொலைநோக்குப் பார்வையும் இன்றைய தலைமுறையை சுயமரியாதை மிக்க சமுதாயமாக மேம்படுத்தி, தங்களின் உரிமைகளுக்குத் துணிவுடன் குரல்கொடுக்கும் நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் களம் கண்டு, உறுதி காத்து வெற்றிபெற்ற மாணவர்களும், இளைஞர்களும் கறுப்புச்சட்டை அணிந்து போராடினார்கள் என்றால், அது அவர்கள் நேரில் பார்த்திராத பெரியார் கடைப்பிடித்த உத்தி. நமது உரிமைகள் பறிக்கப்படும்போது, எதிர்ப்பின் அடையாளமாக கறுப்பு உடையை அணிந்து களம் கண்டவர் பெரியார். அவர் விதைத்த கொள்கைகள், இன்று ஆலமரமாய் வளர்ந்து அனைத்துத் தரப்பு மக்களுக்கும் குடையாக - நிழலாக - ஊன்றுகோலாகப் பாதுகாப்புதருகிறது. மானமுள்ள தமிழர்களுக்கு இப்போதும் அவரது கொள்கைகளே ஆயுதம். இன எதிரிகளுக்கோ, இப்போதும் அவர் பெயரைச் சொன்னால் அச்சம். 

பெரியார் சிலைகளை அகற்றுவோம் என்பவர் எவராக இருந்தாலும், தமிழர்கள் பெற்றுள்ள உரிமைகளாலும் உயர்வாலும் வயிறு எரிகிறார் என்றே அர்த்தம். அதுவும், டெல்லிவரை தமக்கான ஆட்சி இருக்கிறது என்பதால் வெளிப்படுகிறது, வாய்த்துடுக்குச் சவடால். பாதுகாப்பு வளையத்திற்குள்ளே இருக்கிறோம் என்ற வக்கணையில் உளறும் கசடர்கள் சிலரைப் பார்க்கும்போது, 'மந்திரி குமாரி' திரைப்படத்தின் கற்பனைக் காட்சி ஒன்றில் தலைவர் கலைஞர், "அரண்மனை நாயே... அடக்கடா வாயை", என்று எழுதியிருந்த வசனம், பலருடைய நினைவுக்கு வருவதைத் தடுக்கமுடியாது அல்லவா? அதை இந்த நேரத்தில் நினைவூட்டி, தந்தை பெரியாரின் புகழ் காக்கும் பணியில் ஆர்ப்பாட்டக் களமிறங்கியிருக்கும் அனைத்துத் தரப்பினருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துகளையும், ஆதரவினையும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்'' என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!