'போலீஸுக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளியே தடியடிக்குக் காரணம்' - அன்பில் மகேஷ் கண்டனம்!

திருவெறும்பூர் வாகனச் சோதனையின்போது, காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கீழே விழுந்த உஷா என்கிற பெண் பலியான சம்பவத்தில், அடுத்தடுத்து அரங்கேறிய காட்சிகள் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. சாலை மறியல், தடியடி, கல்வீச்சு எனக் கலவர பூமியாய் மாறியுள்ளது திருச்சி.

திருச்சி

இந்நிலையில், திருவெறும்பூர் போலீஸார் தடியடிகுறித்து அத்தொகுதி எம்.எல்.ஏ., அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில்,  “திருவெறும்பூர் தொகுதியில் உள்ள பெல் ரவுண்டானா பகுதியில், காவல்துறையினரின் அத்துமீறிய செயலால் கர்ப்பிணிப்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இதைக் கண்டித்து, அமைதிவழியில் போராடிய திருவெறும்பூர் தொகுதி பொதுமக்கள் மீதும் கண்மூடித்தனமான தடியடி நடத்தப்பட்டு, ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அன்பில் மகேஷ்

பொதுமக்களைப் பாதிக்கும் இப்படிப்பட்ட செயல்கள் வன்மையாகக்  கண்டிக்கத்தக்கவை. எனது தொகுதியில் நடைபெற்றுள்ள இத்தகைய மோசமான நிகழ்வுகள்குறித்து தகவல் அறிந்தவுடன், காவல்துறை டி.ஜி.பி-யை நேரில் சந்தித்து முறையிட்டேன். அவர் உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயரதிகாரிகளைத் தொடர்புகொண்டு, முழு விவரங்களை கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் போக்குவரத்துக் காவலர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த ஆட்சியில், பொதுமக்களுக்கும் காவல்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டிருப்பதே இப்படிப்பட்ட சம்பவங்களுக்குக் காரணமாக உள்ளது. இந்த நிகழ்வில் உயிரிழந்த பெண்மணியின் உறவினர்களுக்கு, ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!