'சித்தராமையாதான் சசிகலாவுக்கு வசதிகள் செய்து தரச் சொன்னார்' - போட்டு உடைத்த முன்னாள் டி.ஜி.பி

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள சசிகலா, சிறையில் சிறப்பு வசதிகள் பெற 2 கோடி ரூபாய் அளவுக்கு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாக, டிஜஜி ரூபா கடந்த ஆண்டு ஜூலை மாதம் பரபரப்பான குற்றச்சாட்டுகளுடன் கர்நாடகா அரசுக்கு அறிக்கை அளித்தார். அந்தச் சம்பவத்தால், கர்நாடகாவில் சித்தராமையாவின் காங்கிரஸ் அரசு எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாமல் ஆட்டம்கண்டது. உடனடியாக அந்தப் பிரச்னையை சமாளிக்க, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில், தனி நபர் விசாரணைக்கு உத்தரவிட்டு முற்றுப்புள்ளி வைத்தார், சித்தராமையா.

சசிகலா

இதையடுத்து ஆய்வு நடத்திய வினய்குமார், ரூபாவின் குற்றச்சாட்டில் பெரும்பகுதி உண்மையே. சிறையில், கைதிகளுக்கு போதைப் பொருள்கள் உள்ளிட்ட சகல வசதிகளும் தங்குதடையின்றிக் கிடைக்கின்றன. சிறையின் கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயங்கவில்லை, சிறைக் கைதிகள் செல்போன்கள்  பயன்படுத்துவதும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சிறையின் பாதுகாப்பு என்பது மிகவும் பலவீனமாக உள்ளது. எனவே, சிறையின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று தனது அறிக்கையைக் கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் கர்நாடகா அரசுக்கு சமர்ப்பித்தார்.

ரூபா சத்திய நாராயணராவ்

மேலும், வினய்குமார் அறிக்கையில், டிஜஜி ரூபா குறிப்பிட்டதுபோல சசிகலா சிறையில் சிறப்பு சலுகைகள் பெற அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்தது தொடர்பாக, ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். அதே நேரத்தில், சத்திய நாராயணராவும் ரூபாவும், தங்களின் பணி நடத்தை விதிகளை மீறி சிறைத்துறைத் தகவல்களை வெளியே கசியவிட்டதுகுறித்தும் விசாரிக்க உத்தரவிட்டிருந்தார். 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், வினய்குமார் அறிக்கையை சமர்ப்பித்த நிலையில், கடந்த ஆறு மாதங்களாக சித்தராமையா அமைதியாகவே இருந்தார். ஆனால், கர்நாடகாவில் தற்போது மாநிலத் தேர்தலை எதிர்நோக்கி இருப்பதால், பிரசார களத்தில் சிறைத்துறை ஊழல்குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்ற ரகசியத் தகவலை அறிந்த சித்தராமையா, சிறைத்துறையில் நடைபெற்ற ஊழல்குறித்து, ஊழல் தடுப்பு வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி ஊழல் தடுப்புப் பிரிவு, சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணராவ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. 

இதற்குப் பதில் அளிக்கவேண்டிய கட்டாயத்திற்கு வந்த சிறைத்துறை டி.ஜி.பி சத்திய நாராயணராவ், கர்நாடக ஹைகோர்ட்டில் மனு அளித்தார். அதில், "முதல்வர் சித்தராமையா கூறியதால், சிறையில் சசிகலாவிற்கு கட்டில், தலையணை போன்ற வசதிகள் செய்து கொடுத்ததாகக் குறிப்பிடவே. அது கர்நாடகா அரசியலில் புயலை கிளப்பிவிட்டது". இதை சற்றும் எதிர்பார்க்காத முதல்வர் சித்தராமையா, சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்குமாறு, முன்னாள் டி.ஜி.பி சத்தியநாராயணாவுக்கு நான் எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில், சத்தியநாராயணா பொய்யான தகவல்களைத் தெரிவித்துள்ளார் என்று மறுப்பு தெரிவித்துள்ளார். 

மேலும், சத்திய நாராயணராவுக்கு பதில் சிக்கல் ஏற்படுத்த, 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் காலகட்டத்தில், பரப்பன அக்ரஹாரா சிறைக் கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணகுமார், துணை கண்காணிப்பாளராக இருந்த அனிதா மூலம் பதில் கொடுக்க சித்தராமையா தயார் ஆகி வருகிறார் என்று தெரிகிறது. இதனால், அடுத்தடுத்த நாள்களில் கர்நாடக அரசியலில் புயல் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!