வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (08/03/2018)

கடைசி தொடர்பு:08:21 (08/03/2018)

'ஒ.என்.ஜி.சி அதிகாரிகளைக் கைதுசெய்யுங்கள்' - மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

சட்டவிரோதமாக கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுக் கிணறுகள் அமைத்த ஒ.என்.ஜி.சி  நிறுவனத்தின் அதிகாரிகள்மீது வழக்குப் பதிவு செய்து கைதுசெய்ய வேண்டும் என மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் ஜெயராமன் வலியுறுத்தியுள்ளார்.

ஒ என் ஜி சி

இதுகுறித்து கூறியுள்ள அவர், "காவிரி டெல்டா மாவட்டங்களில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுக் கிணறுகள் அமைத்துள்ள ஒ.என்.ஜி.சி நிறுவனத்தின் செயல்பாடுகளில் விதிமீறல்கள் இருப்பதால், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதற்கான உரிமம் வழங்காமல் இருக்கும் தகவல், சில நாள்களுக்கு முன்பு வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவிரி டெல்டா மாவட்டங்களில் செயல்படும் எந்த ஒரு கிணறுக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி தரவில்லை.

கிணறு அமைப்பதற்கு முன்பு, இந்தக் கிணறுகளில் பணிகள் தொடங்குவதற்கு முன்பு என இருமுறை மக்களிடம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், அதுபோல நடத்தப்படவில்லை. கிணறுகள் அமைக்க, செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை. ஆனாலும், சட்டவிரோதமாக கிணறுகள் அமைத்துச் செயல்படுகிறது ஒ.என்.ஜி.சி நிறுவனம். இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிறுவனத்திற்கு அரசு அளித்துள்ள உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும்” என பேராசிரியர் ஜெயராமன் வலியுறுத்தியுள்ளார்.