வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (08/03/2018)

கடைசி தொடர்பு:07:55 (08/03/2018)

ஹெச்.ராஜா மீது திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்!

பா.ஜ.க-வின் ஹெச்.ராஜாவைக் கண்டித்து, திருப்பூர் ரயில்நிலையம் அருகே, பெரியார் இயக்கக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதை வரவேற்ற பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில், ''லெனின் யார், அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, கம்யூனிஸத்துக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று  லெனின் சிலை. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ரா சிலை' என்று கூறியிருந்தார். கடும் எதிர்ப்பு கிளம்பியதால், பின்னர் அந்தப் பதிவை ராஜா நீக்கிவிட்டார்.  

அவரது செயலுக்குக் கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் தி.மு.க, கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ராஜாவைக் கண்டித்து, திருப்பூர் ரயில்நிலையம் அருகே பெரியார் இயக்கக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் கலந்துகொண்டு ஹெச்.ராஜாவுக்கு எதிராகத் தங்களின் கண்டன முழக்கங்களை எழுப்பின.

திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், பெரியார் சிலை உடைப்பு முயற்சியைக் கண்டித்தும், பா.ஜ.க-வினர் அச்செயலில் ஈடுபட தூண்டுதலான வகையில் பேசிய, பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ராஜாவை குண்டர் சட்டத்தில் காவல்துறை கைதுசெய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்கள் எழுப்பித் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், ராஜாவைக் கைதுசெய்ய வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவும் அளிக்கப்பட்டது.