ஸ்டாலின் நடத்திய ஆய்வின் எதிரொலி: புகார் சொன்னவர்மீது கொலைவெறித் தாக்குதல்!

தி.மு.க-வில் என்ன நடக்கிறது என்பதை அறிய, மாவட்ட வாரியாக ஸ்டாலின் கள ஆய்வு நடத்திவருகிறார். அதில், நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் மற்றும் ஒன்றியச் செயலாளர்மீதும் புகார் பட்டியல் வாசித்தவர்மீது கொலைவெறித் தாக்குதல் நடந்து, அவர் தற்போது அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவருகிறார்.  

தாக்குதல்

மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள வசந்தகுமார்

ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. படுதோல்வியைச் சந்தித்தது. எனவே, தி.மு.க-வில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், மாவட்ட வாரியாக கட்சிப் பொறுப்பாளர்களைச் சந்தித்து அவர்களது கருத்தைக் கேட்டுவருகிறார். அந்தவகையில், நாகை தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கௌதமன் மற்றும் தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் மகாகுமார் ஆகியோர்மீது ஸ்டாலினிடம், தலைஞாயிறு ஒன்றியத்துக்குட்பட்ட கொத்தங்குடி ஊராட்சியின் செயலர் வசந்தகுமார் புகார் கூறியிருக்கிறார்.  அதன்பிறகு நடந்ததை, வசந்தகுமார் நம்மிடம் விவரித்தார்.

~22.02.2018ல் தளபதி ஸ்டாலின் நடத்திய நேர்காணலில், எங்கள் ஒன்றிய தி.மு.க-வில் நடந்த குளறுபடிகளை எடுத்துக்கூறினேன்.  அதில், தலைஞாயிறு ஒன்றிய தி.மு.க செயலாளர் மகாகுமார் மீது அழுத்தமான குற்றச்சாட்டுகளைக் கூறினேன்.  இதை மனதில் வைத்துக்கொண்டு, அடியாட்களை ஏவி, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர், என்னை உதைத்துத்தள்ளி இரும்பு பைப்புகளாலும், அரிவாள்களாலும் தலை, கை, கால் ஆகிய இடங்களில் தாக்கினார்கள்.  உயிருக்கு ஆபத்தான நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறேன்.  தளபதி ஸ்டாலினிடம் இங்கு நடக்கும் உண்மை நிலவரத்தைச் சொன்ன காரணத்தால் தாக்கப்பட்டுள்ளேன்.  இதை, தளபதி ஸ்டாலின் அறிந்துகொண்டு என்னைத் தாக்கியவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கிறேன்" என்றார்.  

ஏற்கெனவே, மாவட்ட கூட்டத்தில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட விவசாய அணிச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் என்பவர், மாவட்ட தி.மு.க மீது புகார் கூறிய காரணத்திற்காக கழக வேட்டியை அவிழ்த்துவிட்டு தாக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள். 

இதுபற்றி தலைஞாயிறு ஒன்றிய தி.மு.க செயலாளர் மகாகுமாரிடம் விளக்கம் கேட்டபோது, "எனக்கும் இந்தப் பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  வசந்தகுமாருக்கு நான் எவ்வளவோ உதவிகள் செய்துள்ளேன்.  அவர்மீது தாக்குதல் நடத்திய உண்மையான குற்றவாளிகள்மீது போலீஸார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. மற்றபடி என்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல'' என்று முடித்தார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!