காரைக்குடியில் சி.பி.ஐ... கார்த்தி சிதம்பரம் கைது படலத்தின் அடுத்தகட்டம்..!

கார்த்தி சிதம்பரம்

.என்.எக்ஸ் மீடியா நிறுவன விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்திருக்கிறது. சி.பி.ஐ கஸ்டடியில் இருக்கும் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருவதாக சொல்லப்படுகிறது. அதனால், அவரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த சட்டப்படியான நடவடிக்கைகளில் தீவிரமாகியிருக்கிறது. இதேநேரம், எந்த நேரமும் ப.சிதம்பரத்திற்கு சி.பி.ஐ. தரப்பிலிருந்து சம்மன் போகலாம் என்கிற சூழ்நிலை நிலவுகிறது. ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம்... இருவருக்கும் நெருக்கமான நண்பர்கள், பிஸினஸ் பிரமுகர்கள், உறவினர்கள், காங்கிரஸில் உள்ள பிரமுகர்கள் என்று நான்கு வகையான லிஸ்ட்டுகளை சி.பி.ஐ. தயாரித்து வைத்திருக்கிறது. சம்மந்தப்பட்ட ஒவ்வொருவரின் அலுவலகம், வீடு...இவற்றில் அதிரடி ரெய்டு நடக்கவும் ஏற்பாடாகிவருகிறது. பொதுவாக, சி.பி.ஐ. விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தராதவர்களுக்கு இந்த டெக்னிக்கை பயன்படுத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது சி.பி.ஐ. வழக்கம். இதற்கு மத்திய உள்துறை அமைச்சகமும் பச்சைக்கொடி காட்டிவிட்டது.  

நூதன மோசடியும் மர்ம பாஸும்

இதுபற்றி டெல்லியில் உள்ள உள்துறை வட்டாரத்தில் சில அதிகாரிகளிடம் பேசியபோது, " தமிழகத்தில் குறுகிய காலத்தில் சங்கிலித் தொடர் போலத் தொடங்கப்பட்ட மருத்துவமனையின் பின்னணியைப் பற்றி துருவிக் கொண்டிருக்கிறார்கள். டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரத்தின் நண்பர்கள் யாருக்காவது இதில் தொடர்பு இருக்கிறதா என்கிற ரீதியில் விசாரணை நடைபெற்றுவருகிறது. ப.சிதம்பரம் நிதித்துறை அமைச்சராக இருந்தபோது, சில தேசிய வங்கிகளின் எம்பளம் மாற்றப்பட்டது. இதனால், சம்மந்தப்பட்ட வங்கிகளின் முழு அமைப்பே மாறியது. இதற்கெல்லாம் வெவ்வேறான கான்ட்ராக்ட்டுகள் விடப்பட்டன. அவற்றில் கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததா? என்று விசாரிக்கிறோம். கார்த்தி சிதம்பரத்தின் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆபீஸ் மும்பையில் இயங்கியது. அதில் அரசியல் பிரமுகர்களின் வாரிசுகள் பார்ட்டனர்களாக இருந்திருக்கிறார்கள். பங்கு மார்க்கெட்டில் சில நிறுவனங்களின் பங்குகள் சர்ரென்று குறைந்திருக்கிறது. அவற்றைக் குறிப்பிட்டு சொல்லி,  தமிழகத்தை சேர்ந்த பிரபல சினிமா நடிகர்கள், அரசியல் தலைவரகள்...என்று பணக்காரர்களை முதலீடு செய்யும்படி சிலர் ஐடியா தந்திருக்கிறார்கள். அதன்படி, அவர்கள் பங்குகளை வாங்கியதும்... மர்மமான முறையில் அந்த நிறுவன பங்குகள் மார்க்கெட்டில் திடீரென உயர்ந்திருக்கின்றன. இந்தவகை நூதன மோசடியின் பாஸ் யார் என்று விசாரித்து வருகிறோம். நிச்சயமாக, கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ப.சிதம்பரத்துடன் நெருக்கமாக இருந்த காரைக்குடி ஏரியா பிரமுகர்...இலங்கை உட்பட வெளிநாடுகளில் பிஸினஸ் நடத்தி வந்திருக்கிறார். சிலர் மணல் பிஸினஸில் ஈடுபட்டிருக்கிறார்கள். அகில இந்திய அளவில் தொழிலபதிர்களின் வங்கி பரிவர்த்தனைகளை நான்கு எழுத்து பிரமுகர் கவனித்து வந்திருக்கிறார். சிதம்பரம் கைகாட்டிய வேறு சிலர் பிரபல வங்கிகளின் கௌரவப்பதவிகளில் அமரவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்தார்கள்? என்பது குறித்தும் விசாரிக்கிறோம். கார்த்தி சிதம்பரத்தின் உதவியாளர் ஒருவர் கோவைக்காரர். கொங்கு மண்டலத்தில் சில பிஸினஸ்களில் மறைமுகமாக கார்த்தி சிதம்பரம் ஈடுபட்டு வந்தது குறித்து எங்களுக்கு மொட்டைக்கடிதங்கள் வந்துள்ளன. அவற்றை கவனமாக படித்து வருகிறோம். இதையெல்லாம் விசாரிக்க விரைவில் காரைக்குடிக்கு போகிறோம்.  சந்தேக லிஸ்டில் உள்ளவர்களின் ஜாதகங்களை சேகரித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறோம் " என்கிறார்.

தமிழக காங்கிரஸில் உள்ள சிதம்பரம் கோஷ்டியினரைப் பற்றி எதிர்கோஷ்டியினர் வண்டிவண்டியாக ஆதாரங்களை சி.பி.ஐ-க்கு அனுப்பி வருவதாக சத்தியமூர்த்தி வட்டாரத்தில் பேசப்படுகிறது.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!