பெற்றோருக்காக நோய்களை எதிர்த்துப் போராடும் தெய்வமகள்! | Interview of Kaliyammal from Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 11:29 (17/03/2018)

கடைசி தொடர்பு:11:29 (17/03/2018)

பெற்றோருக்காக நோய்களை எதிர்த்துப் போராடும் தெய்வமகள்!

“எனக்கு 25 வயசு ஆச்சு சார். இந்த வயசுல நான்தான் அப்பா, அம்மாவைக் குழந்தை மாதிரி பார்த்துக்கணும். ஆனால், அவங்கதான் இப்பவும் என்னைக் குழந்தை மாதிரி பார்த்துக்கறாங்க” எனச் சொல்லும்போதே காளியம்மாள் கண்கள் குளமாகிறது.

கோபனாரி

கோவை மாவட்டம், ஆனைகட்டி அருகே இருக்கிறது கோபனாரி என்ற அழகிய மலைக்கிராமம். நூற்றுக்கணக்கான பழங்குடிக் குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில்தான் காளியம்மாள் இருக்கிறார். குழந்தையாக இருந்தபோது மிகவும் ஒல்லியாக இருந்தார் என்பதற்காக ஹார்மோன் ஊசிகளைப் பயன்படுத்தியுள்ளனர். அதன் விளைவு, உடல் பருமன், சர்க்கரை வியாதி, தைராய்டு, கால்வலி என அன்றாடம் நோய்களோடு போராடிவருகிறார் காளியம்மாள்.

இதே உடல் நிலையுடன்தான், பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார். கோவையில் பி.ஏ பட்டம், மதுரை மற்றும் கோவை சட்டக் கல்லூரிகளில் பி.எல் முடித்து, தற்போது வீட்டிலேயே பழங்குடிக் குழந்தைகளுக்கு டியூசன் எடுத்துவருகிறார். உடல்நலக் குறைவு காரணமாகக் காளியம்மாளின் அப்பாவும் வீட்டில் முடங்கிவிட, கூலி வேலைக்குச் செல்லும் தாயின் வருமானம்தான் குடும்பத்தை நடத்த முடிகிறது.

காளியம்மாள்

“சின்ன வயசிலிருந்தே வக்கீல் ஆகணும்னு ஆசை. ஆனால், எப்படிச் சேரணும்னு தெரியாமல்,  பி.ஏ படிச்சுட்டு எம்.ஏ சேர்ந்திருந்தேன். கொஞ்ச நாளில் எம்.ஏ-வை டிஸ்கன்டினியூ பண்ணிட்டு, பி.எல் சேர்ந்தேன். அப்துல் கலாம் ஐயாவின் நண்பர் சம்பத்குமார் சார், பத்திரிகையாளர் சுதாகர் சார், மருத்துவர் மகேஸ்வரன் சார் ஆகியோர்தான் எனக்குத் தேவையான பணம், மருத்துவ உதவிகளை செஞ்சாங்க. அவங்களால்தான் இந்த அளவுக்கு வந்திருக்கேன்'' என்கிறார் காளியம்மாள்.

 கனவுகள் ஆயிரம் இருந்தாலும், காளியம்மாளுக்கு உடல்நிலை பெரும் சவாலாக இருக்கிறது. கொஞ்ச நேரம் நிலையாக நிற்க முடியாது. வீட்டைவிட்டு வெளியே வருவதே பெரிய விஷயம்.

''அப்பாவுக்கு இப்பத்தான் உடம்பு ஓரளவுக்குத் தேறியிருக்கு. அம்மாவுக்கு ஒருநாள் வேலை இருந்தால், இன்னொரு நாள் இருக்காது. எனக்கு 25 வயசு ஆச்சு சார். இந்த வயசுல என் அப்பா, அம்மாவை நான்தான் குழந்தை மாதிரி பார்த்துக்கணும். ஆனா, அவங்கதான் என்னை குழந்தை மாதிரி பார்த்துக்கறாங்க. என் உடல்நிலை சரியானால் போதும். அப்பா, அம்மாவை நான் பார்த்துப்பேன். என் வாழ்க்கையில இதைவிட வேற பெரிய விஷயம் ஒண்ணும் இல்ல சார்'' என்கிற காளியம்மாள் கண்களில் நம்பிக்கைச் சுடர்.

காளியம்மாள்

காளியம்மாளுக்கு உதவி செய்துவரும் சமூக ஆர்வலரும் பத்திரிகையாளருமான சுதாகர், ''காளியம்மாள் நிலையில் யார் சுதாகர்இருந்திருந்தாலும் முடங்கிப் போயிருப்பாங்க. ஆனால், தன் அப்பா அம்மாவுக்காகவே நோய்களை எதிர்த்து தன்னம்பிக்கையோடு ஓடிட்டு இருக்காங்க. அவங்க பகுதியின் பழங்குடி மக்கள் பிரச்னைகள் வெளியே வரவும் காளியம்மாள் முயற்சிகளை எடுக்கிறாங்க. கஷ்டப்படும் பழங்குடிக் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, அந்தப் பகுதியின் சுகாதாரப் பிரச்னைகள், அடிப்படை தேவைகள் எனப் பல விஷயங்களுக்குக் காளியம்மாள் முயற்சியால தீர்வு கிடைச்சு இருக்கு'' என்றார்.

பெற்றவர்களையே நட்டாற்றில் விடும் பலசாலிகளுக்கு மத்தியில், தனது பெற்றோருக்காகவும் ஊருக்காகவும் நோயுடன் போராடி வரும் காளியம்மாள், நிச்சயம் தெய்வமகள்தான்.


டிரெண்டிங் @ விகடன்