ஹெச்.ராஜா உருவ பொம்மைக்கு சவப்பாடை! காவல்துறையினருடன் மல்லுக்கட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

'பெரியார் சிலையை உடைப்போம்' என்ற தொணியில் கருத்து பதிவிட்டிருந்த ஹெச். ராஜாவுக்கு எதிராக,  தமிழகமே கொதித்து எழுந்திருக்கும் நிலையில், சேலத்தில் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உட்பட்ட பல கட்சியினர், சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரிலும், தந்தை பெரியார் சிலை முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஹெச்.ராஜா புகைப்படத்தை செருப்பால் அடித்ததோடு, உருவ பொம்மை எரிப்பு, சாலை மறியல் போன்றவற்றில் ஈடுபட்டார்கள்.

சேலம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக, ஹெச்.ராஜாவுக்கு சவப்பாடை கட்டித் தூக்கிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு, தீ வைத்துக் கொளுத்த முயன்றார்கள். காவல்துறையினர் அதைத் தடுத்து, அந்த சவப்பாடையைக் கைப்பற்றினர். இதனால், பெரியார் தொண்டர்களுக்கும், சேலம் காவல்துறையினருக்கும் சற்று நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுபற்றி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேலம் மாநகர் தலைவர்  பரமேஷ்குமார், ''திரிபுராவில் வெனில் சிலையை உடைத்தது போல நாளை தமிழகத்தில் சாதி வெரியர் பெரியார் சிலையை உடைப்போம் என்று பதிவிட்டு, தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த நினைத்த ஹெச்.ராஜாவுக்கு எதிர்வினையாக நாங்கள்,  அவரை தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று சவப்பாடை கட்டி தூக்கிச் சென்றோம். இவர், தொடர்ந்து இப்படி இழிவாகப் பேசி வன்முறையைத் தூண்டிவிடுகிறார். இவர்மீது, தேசிய பாதுகாப்புச் சட்டம் உட்பட பல வழக்குகள் போட்டுக் கைதுசெய்து சிறையில் அடைப்பதோடு, இனி இதுபோன்று பேச முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். திரிபுராவில் உடைக்கப்பட்ட அதே இடத்தில் லெனின் சிலையை வைக்க வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!