வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (08/03/2018)

கடைசி தொடர்பு:12:20 (08/03/2018)

வேலைவாய்ப்பு அற்றோர் எண்ணிக்கை 7.1 சதவிகிதம் ஆனது! - 15 மாதங்களில் மிக அதிகம்!!

வேலைவாய்ப்பு

இந்தியாவில் வேலையில்லாமல் அவதிப்படுவோரின் எண்ணிக்கை கடந்த பிப்ரவரி 25-ம் தேதியுடன் முடிவடைந்த 71-வது வாரத்தில், 7.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதுவே, 15 மாதங்களில் பதிவானதில் மிக அதிகமான அளவு ஆகும். இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் எனும் அமைப்பு(CMIE) இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

அரசுத் தரப்பில் வேலைவாய்ப்பு நிலவரம் சீராக இருப்பதாகக் கூறப்பட்டாலும், இந்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்கள் நேர்மாறாக இருக்கின்றன. ஒன்றரை ஆண்டுகளில் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கையானது, முன்னதாக, கடந்த ஜனவரியில் வேலையற்றோரின் எண்ணிக்கை 5 சதவிகிதமாக இருந்தது.  கடந்த ஜூலையில் மிகக் குறைவாக 3.39% ஆக இருந்தது. அதன் பிறகு படிப்படியாக அதிகரித்தது. அக்டோபர் முதல் ஜனவரிவரை ஏறத்தாழ 5 சதவிகிதம் என்கிற அளவிலேயே நீடித்தது. பிப்ரவரி 4-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கை 6.8% ஆகவும் அடுத்து 6.7%ஆகவும் ஆனது. அண்மைய மூன்று வாரங்களில் வேலை வாய்ப்பற்றோர் விகிதமானது ஏறத்தாழ 7 எனும் அளவில் தொடர்ச்சியாகக் காணப்பட்டது.

ஆனாலும், பணமுடக்கத்துக்கு முந்தைய அளவுகளை நோக்கி இது போகிறது. பணமுடக்கத்துக்கு அடுத்து உடனே 2016 பிப்ரவரியில் வேலைவாய்ப்பின்மை அளவானது 8.5 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி மாத கடைசி நிலவரமானது,  தொழிலாளர் பங்களிப்பு அதிகரித்திருப்பதையும் வேலை வாய்ப்பின்மை அதிகமாக இருப்பதையும் காட்டுகிறது. கடந்த மாதக் கடைசிவாரப்படி, வேலை தேடுவோரின் எண்ணிக்கையானது 31 மில்லியன் அதாவது 3.1 கோடியை எட்டியுள்ளது. 2016 அக்டோபரிலிருந்து இது அதிக அளவாகும். 

பணமுடக்கத்துக்கு முன்னர் 2016 ஜனவரி -அக்டோபர் காலகட்டத்தில் 46 - 48 சதவிகிதமாக இருந்த தொழிலாளர்களின் பங்களிப்பு, கடந்த ஜூலையில் 43 சதவிகிதமாகக் குறைந்தது. அதன் பிறகு இது அதிகரித்தாலும் கடந்த ஜனவரி வரை 44 சதவிகிதமாகவே இருந்தது. பணமுடக்கத்துக்குப் பின்னர், தொழில்சந்தையிலிருந்து அதிகமானவர்கள் வெளியேறியதும் பின்னர் திரும்ப வந்ததும் பொதுமக்களின் வாழ்க்கையில் பணமுடக்கம் ஏற்படுத்திய முக்கிய தாக்கத்தை உணர்த்துகிறது என்றும் இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.